சென்னை புளியந்தோப்பு சாஸ்திரி நகர், 12ஆவது தெருவைச் சேர்ந்தவர் அரிகிருஷ்ணன் (32). இவர் சேலத்தில் தங்கியிருந்து அங்குள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார்.
இவரது மனைவி பாக்கியலட்சுமி (26). இவர் மீன் வியாபாரம் செய்து வருகிறார். தம்பதிக்கு பிரகாஷ்ராஜ் (5) கோகுல்ராஜ் (2) ஆகிய இரு மகன்கள் உள்ளனர். அதே பகுதியில் வசித்து வந்த பாக்கியலட்சுமியின் தங்கை பவானி (20), இவரது கணவர் அருண்குமார்( 22). இவர், கேனில் டீ வியாபாரம் செய்து வருகிறார். இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
இதற்கிடையில், கடந்த மாதம் 18 ஆம் தேதி அருண்குமார், தனது மனைவி பவானியுடன் ஆவடி அருகே பட்டாபிராம், ராஜீவ்காந்தி நகர், வள்ளலார் தெருவில் உள்ள ஒரு வீட்டில் வாடகைக்கு குடி புகுந்தார். மேலும், அவர்கள் வரும் போது பாக்கியலட்சுமியி இரண்டாவது மகன் கோகுல்ராஜை அழைத்துக்கொண்டு வந்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த 5ஆம் தேதி, கோகுல்ராஜ் வீட்டு படிக்கட்டில் இருந்து விழுந்து தலையில் காயமாகிவிட்டதாக கூறி எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல அரசு மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இதுகுறித்து பாக்கியலட்சுமிக்கு தங்கை பவானி தகவல் கொடுத்தார். பின்னர், அவர் விரைந்து வந்து மருத்துவமனையில் குழந்தையை பார்த்து விசாரித்துள்ளார். அப்போது குழந்தையின் தலை, கை, கால் உள்ளிட்ட இடங்களில் காயங்கள் இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து, சந்தேகமடைந்த பாக்கியலட்சுமி ஆவடி காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
இதையடுத்து, இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில், அருண்குமார், பவானியை காதலித்து திருமணம் செய்வதற்கு ஆரம்பத்தில் பாக்கியலட்சுமி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால் அருண்குமாருக்கும், பாக்கியலெட்சுமிக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இதனை மனதில் வைத்துக்கொண்டு சம்பவத்தன்று அருண்குமார் வேலை முடிந்து குடிபோதையில் வீட்டுக்கு வந்துள்ளார்.
பின்னர், அவர் வீட்டில் இருந்த கரண்டியை எடுத்து கோகுல்ராஜை சரமாரியாக அடித்து உள்ளார். மேலும், அவர் வீட்டில் அவனை மிதித்து கீழே தள்ளி விட்டுள்ளார். இதில் அவனுக்கு தலை உள்ளிட்ட இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதன்பிறகு, தம்பதியினர் கோகுல்ராஜை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்துள்ளனர் என்பது விசாரணையில் தெரியவந்தது.
இதனையடுத்து காவல் துறையினர் அருண்குமாரை கைது செய்து பின்னர், பூவிருந்தவல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.