சென்னை:முதலமைச்சர் ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,சென்னையில் இருந்து ராணிப்பேட்டை (NH-4) வரை இருக்கும் சாலையின் நிலையை மேம்படுத்திட வேண்டுமென எம்பி தயாநிதி மாறன் நாடாளுமன்றத்தில் விடுத்த கோரிக்கையைக் குறிப்பிட்டு, இந்தச் சாலை சென்னை நகரம் மற்றும் அதன் துறைமுகங்களில் இருந்து காஞ்சிபுரம், வேலூர், இராணிப்பேட்டை, ஓசூர் மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய இடங்களில் உள்ள தொழில் நிறுவனங்களுக்கு முக்கிய இணைப்பை வழங்குவதாகத் தெரிவித்துள்ளார்.
இந்த சாலையின் தற்போதைய நிலைமை மிகவும் மோசமாக உள்ளதாகவும், அதன் காரணமாக, சமீபத்தில் ஒரு சில மாவட்டங்களுக்கு, தான் ரயிலில் செல்ல நேரிட்டதாகவும் குறிப்பிட்டுள்ள முதலமைச்சர், இந்தச் சாலை தொடர்பான தங்களது நாடாளுமன்ற உறுப்பினரின் கோரிக்கை முக்கியமானதாக இருந்தபோதிலும், நாடாளுமன்றத்தில் மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் அளித்துள்ள பொதுவான மற்றும் உறுதியற்ற பதிலால் தாங்கள் ஏமாற்றமடைந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில், இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் திட்டங்களுக்கு ஆதரவாக தமிழ்நாடு அரசு நடவடிக்கைகள் எடுத்துவருவதாகவும், குறிப்பாக, சென்னை துறைமுகம் முதல், மதுரவாயல் வரையிலான உயர்மட்ட விரைவுச் சாலைத் திட்டத்திற்கு, சாத்தியமான எல்லா உதவிகளையும் தமிழ்நாடு அரசு வழங்குவதன் மூலம் அந்தத் திட்டம் புத்துயிர் பெற்றுள்ளதாகவும், கடந்த காலத்தில் வழங்கப்படாத பல்வேறு சலுகைகள் மற்ற பெரிய NHAI திட்டங்களுக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும் ஸ்டாலின் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
நெடுஞ்சாலைத் திட்டங்களுக்காக நிலம் கையகப்படுத்துவதைக் கண்காணிக்க மாநிலத் தலைமையகத்தில் சிறப்புப் பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும், வனத்துறை அனுமதி பெறப்படுவது தொடர்பாக அவ்வப்போது, ஆய்வு செய்யப்படுவதாகவும், தான் அறிந்தவரையில், எந்தவொரு பெரிய NHAI திட்டமும் அத்தகைய அனுமதிகளுக்காக நிறுத்தி வைக்கப்படவில்லை என்றும், முதலமைச்சர் தெரிவித்துள்ளர்.
நிலம் கையகப்படுத்துதல் மற்றும் குவாரி மண் எடுக்க அனுமதி வழங்குதல் போன்றவற்றில் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மேற்கொள்ளும் பணிகளின் முன்னேற்றம் தொடர்பாக தலைமைச் செயலாளர் மட்டத்தில் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், பொருட்களுக்கான விலை, உரிமத் தொகை மற்றும் தீர்வை வரிக் கட்டணத்தை தள்ளுபடி செய்வது, இலவசமாக மண் எடுக்க அனுமதி போன்ற மற்ற கோரிக்கைகள் பரிசீலனையில் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.