தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைகளுக்கான விளையாட்டுப்போட்டிகள் தொடக்கம்! - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

சென்னையில், தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைகளுக்கான விளையாட்டுப் போட்டிகளை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Jan 24, 2023, 5:34 PM IST

சென்னை: இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை, சென்னை மாவட்டப் பிரிவின் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி இணைந்து நடத்தும் 2022 மற்றும் 2023ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் இன்று(ஜன.24) சென்னை சிந்தாதிரிப்பேட்டை மே தின பூங்கா மைதானத்தில் நடைபெற்றது. இதனை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் முதல் முறையாக பொதுப்பிரிவு, பள்ளி, கல்லூரி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் அரசு ஊழியர்கள் ஆகிய 5 பிரிவுகளில் நடத்தப்படுகிறது. பல்வேறு விளையாட்டுகளில் மொத்தமாக 50 போட்டிகள் நடத்தப்படவுள்ளன.

இந்தப் போட்டிகளில் அதிக அளவில் பதக்கம் பெறக்கூடிய பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகளின் பயிற்சியாளர்களுக்கு தமிழ்நாடு அரசின் சிறந்த பயிற்சியாளர் மற்றும் சிறந்த உடற்கல்வி ஆசிரியர் அல்லது இயக்குனர் ஆகிய விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட அளவிலான தனிநபர் போட்டிகளுக்கு முதல் பரிசாக 3,000 ரூபாயும், இரண்டாம் பரிசாக 2,000 ரூபாயும், மூன்றாம் பரிசாக 1,000 ரூபாயும் வழங்கப்பட உள்ளது. அதேபோல, இரட்டையர் பிரிவு போட்டிகளுக்கு முதல் பரிசு 6 ஆயிரம் ரூபாய், இரண்டாம் பரிசு 4 ஆயிரம் ரூபாய், மூன்றாம் பரிசாக 2000 ரூபாய் வழங்கப்பட உள்ளது.

மாவட்ட அளவிலான போட்டிகள் ஜனவரி மற்றும் பிப்ரவரியிலும், மாநில அளவிலான போட்டி மே மாதத்திலும் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் போட்டிகளுக்கு மொத்தமாக 25 கோடி ரூபாய் பரிசுத் தொகையாக வழங்கப்பட உள்ளது.

கபடி, கூடைப்பந்து மற்றும் கையுந்து பந்து போட்டியில் முதலாவதாக வெற்றி பெறும் குழுவிற்கு 36 ஆயிரம் ரூபாய், இரண்டாம் பரிசு 24 ஆயிரம், மூன்றாம் பரிசாக 12 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட உள்ளது. கால்பந்து போட்டியில் முதலாவதாக வெற்றி பெறும் குழுவுக்கு 54 ஆயிரம் ரூபாயும், இரண்டாம் பரிசாக 36 ஆயிரம் ரூபாயும், மூன்றாம் பரிசாக 18 ஆயிரம் ரூபாயும் வழங்கப்பட உள்ளது.

ஹாக்கி போட்டியில் முதலாவதாக வெற்றி பெறும் குழுவுக்கு 54 ஆயிரம் ரூபாயும், இரண்டாம் பரிசாக 36 ஆயிரம் ரூபாயும், 18 ஆயிரம் ரூபாயும் வழங்கப்பட உள்ளது. இன்று மே தின பூங்கா மைதானத்தில் பள்ளி மாணவ மாணவிகளுக்கான கால்பந்து போட்டி, பொதுப்பிரிவில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு கபடி மற்றும் இறகுப்பந்து போட்டிகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் டாஸ் போட்டு தொடங்கி வைத்தார். போட்டியைத் தொடங்கி வைப்பதற்கு முன்னதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் இருவரும் இறகுப்பந்து விளையாடினர்.

இதனைத்தொடர்ந்து சென்னை தியாகராய நகர் கண்ணதாசன் மைதானத்தில், பள்ளி மாணவ மாணவிகளுக்கான கூடைப்பந்து போட்டி, கல்லூரி மாணவ மாணவிகளுக்கான சிலம்பம் போட்டி, அரசு ஊழியர்களுக்கான சதுரங்க போட்டி உள்ளிட்டவற்றை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: சுருக்குமடி வலை பயன்படுத்த அனுமதி; உச்சநீதிமன்ற விதித்த நிபந்தனை என்ன?

ABOUT THE AUTHOR

...view details