சென்னை: கலைவாணர் அரங்கத்தில் இன்று (ஜன.12) நடைபெற்ற "அயலகத் தமிழர் தினம் 2023" விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு உரையாற்றினார்.
முதலமைச்சர் ஸ்டாலின் உரையில், "அயலகத்தில் வாழும் தமிழர் நலன் காக்கும் வகையில் தொடங்கப்பட்ட இத்துறையில், கடந்த ஓராண்டில் மட்டும் வெளிநாடுகளில் இறந்து போன 288 தமிழர்களின் உடல்களை தமிழ்நாட்டிற்கு கொண்டு வருதல், அங்கே இறந்தவர்களின் ஊதிய நிலுவை மற்றும் இழப்பீட்டுத் தொகையை பெற்றுத் தருதல், மருத்துவ இயலாமையால் பாதிக்கப்பட்டவர்களை தமிழ்நாட்டிற்கு அழைத்து வந்து உரிய சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்தல், இதுபோன்ற வேலைகளை அங்குள்ள இந்தியத் தூதரகம் மற்றும் தமிழ்ச் சங்கங்களின் உதவியுடன் செயல்படுத்தி வருகின்றது.
அயலகத் தமிழர்களின் நலனுக்கென அமைக்கப்பட்டுள்ள அயலகத் தமிழர் நல வாரியத்தில் பதிவு செய்து, அயல்நாட்டிற்குச் செல்லும் தமிழர்களுக்கு அடையாள அட்டை, காப்பீடு, குடும்பத்தில் உள்ளவர்களுக்குத் திருமண உதவித் தொகை, கல்வி உதவித் தொகை எனப் பல நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன.
ஏற்கெனவே நம் அரசு, வெளிநாடுவாழ் தமிழர்கள் நலனுக்கென பல்வேறு முன்னெடுப்புகளை செய்து வருகிறது. குறிப்பாக கோவிட் பெருந்தொற்றுக் காலத்தில் வெளிநாடுகளிலிருந்து 80 ஆயிரம் தமிழர்கள் பாதுகாப்பாகத் தமிழ்நாட்டிற்கு அழைத்து வரப்பட்டனர். அவர்கள் பணி வாய்ப்பை இழந்த காரணத்தால் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் மூலமாக மானியத்துடன் கூடிய கடன் வசதி வழங்கும் புதிய திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ரஷ்யா - உக்ரைன் இடையே போர் மூண்ட போது, இந்திய ஒன்றிய அரசின் ஒத்துழைப்புடனும், உக்ரைனின் அண்டை நாடுகளில் உள்ள தமிழ்ச் சங்கங்கள் மற்றும் தன்னார்வலர்கள் உதவியுடனும் தமிழ்நாடு அரசு மேற்கொண்ட முயற்சியால், உக்ரைனில் மருத்துவம் பயின்று வந்த 1,890 மாணவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். இவர்களில் 1,524 மாணவர்கள் தமிழ்நாடு அரசின் செலவில் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.