சென்னை: இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை சார்பில் சென்னையில் உள்ள தனியார் ஹோட்டலில் நேற்று (மே 8) நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 'தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை'-யை தொடங்கி வைத்து, 'முதலமைச்சர் கோப்பைப் போட்டிகள் 2023'-க்கான 'வீரன், சின்னம், கருப்பொருள் பாடல் மற்றும் டி-ஷர்ட்' ஆகியவற்றை வெளியிட்டார்.
மேலும், 'முதலமைச்சர் கோப்பைப் போட்டிகள் 2023'-க்கான இலச்சினையை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும், வலைதளத்தை இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியும் வெளியிட்டனர்.
முதலமைச்சர் கோப்பைப் போட்டிகள் – 2023:44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் நிறைவு விழாவின் போது, தமிழ்நாடு முதலமைச்சர் "நமது பாரம்பரிய விளையாட்டுகளான கபடி மற்றும் சிலம்பம் விளையாட்டுகளுடன் 12 விளையாட்டுகளை உள்ளடக்கிய முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள் நடைபெறும்" என்ற அறிவிப்பினை வெளியிட்டு இருந்தார்.
முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் தற்போது நமது பாரம்பரிய விளையாட்டுகளான கபடி மற்றும் சிலம்பம் விளையாட்டுகள் உட்பட 15 விளையாட்டுப் போட்டிகள் அனைத்து வகையான விளையாட்டு வீரர்களையும் இணைத்து நடத்தப்படுகின்றன. இப்போட்டிகள் பள்ளி, கல்லூரி, பொதுப்பிரிவு, அரசு ஊழியர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உட்பட இருபாலருக்கும் நடத்தப்படுகின்றன.
இப்போட்டிகளை நடத்துவதற்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் அவர்களின் தலைமையில் மாநில அளவிலான ஒருங்கிணைப்புக் குழுவும், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் தலைமையில் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர்நல ஒருங்கிணைப்புக் குழுவும் மற்றும் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர்நல அலுவலரை ஒருங்கிணைப்பாளாராக கொண்ட மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்புக் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.