மாணவர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கிய முதலமைச்சர் ஸ்டாலின் சென்னை:பள்ளிக் கல்வித் துறை சார்பில் சென்னை, அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற நாட்டின் முதன்மை உயர்கல்வி நிறுவனங்களுக்குச் செல்லும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் மடிக்கணினிகளை வழங்கும் நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டார். பின்னர், மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் மடிக்கணினிகளை வழங்கினார். தொடர்ந்து அவர் பேசும்போது, “பள்ளிக் கல்வித் துறையை பொறுத்தவரைக்கும், தினந்தோறும் மிகச்சிறந்த முன்னெடுப்புகளை எடுத்து வருகிறோம். இருந்தாலும், இன்றைக்கு ஒரு சிறப்பு தினம்.
தமிழ்நாட்டினுடைய பள்ளிக் கல்வி வரலாற்றில் ஒரு முக்கியமான நாள். கொண்டாட்டத்திற்குரிய நாளாக அமைந்திருக்கிறது. அந்த மகிழ்ச்சியோடு தான் உங்களை எல்லாம் நான் சந்திப்பதற்கு வந்திருக்கிறேன். உங்கள் பெற்றோருக்கு இருக்கின்ற அதே அக்கறையுடனும், அன்புடனும் நீங்கள் மட்டுமல்ல, தமிழ்நாட்டு குழந்தைகள் எல்லோரும் கல்வி கற்கவேண்டும், உயர் படிப்புகளுக்குப் போகவேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன். ஏனென்றால், கல்வி நமக்கு இங்கே சுலபமாக கிடைக்கவில்லை. ஒரு காலத்தில் கல்வி நமக்கு எட்டாக்கனி.
இன்றைக்கு நாம் எல்லோரும் படிக்கிறோம் என்றால், அதற்குப் பின்னால், நம்முடைய முன்னோர்கள் நடத்திய, ஏராளமான போராட்டங்கள்தான் காரணமாக இருக்கிறது. நீதிக்கட்சி காலத்தில் இருந்து சமூக நீதியை வலியுறுத்தி வரும் சமூக சீர்திருத்தத் தலைவர்களால் தான் இந்த மாற்றத்தை நம்மால் உருவாக்க முடிந்தது. இந்த மாற்றத்தை இன்னும் சிறப்பாக்க நம்முடைய திராவிட மாடல் அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. எல்லாவற்றிற்கும் ஒரு தூண்டுதல் அவசியம் தேவை. சிறியதாக ஒரு ஆதரவு. சிறியதாக ஒரு ஊக்கப்படுத்துதல் இருந்தால், அதுபோதும்.
நம்முடைய தமிழ்நாட்டு மாணவர்கள் அடித்து தூள் கிளப்பிவிடமாட்டீர்கள். இதுமாதிரியான தூண்டுதல்கள்தான், நான் முதல்வன் , இல்லம் தேடி கல்வி, புதுமைப் பெண், அனைவர்க்கும் ஐஐடி போன்ற திட்டங்கள். அரசு பள்ளி - தனியார் பள்ளிகளும், அரசு கல்லூரி – தனியார் கல்லூரிகளும், நிர்வாக அமைப்பில் வேறுபாடு கொண்டதாக இருக்கலாம். ஆனால் தரத்தில் அனைத்து கல்வி நிறுவனங்களும் ஒரே அளவுகோலோடுதான் இயங்கவேண்டும். இந்த நிறுவனங்கள் எல்லோருக்கும் பொதுவான நிறுவனங்களாக இருக்கவேண்டும்.
அப்படிப்பட்ட சமச்சீர் நிலையைதான் உருவாக்கி வருகிறோம். நாட்டினுடைய முதன்மைக் கல்வி நிறுவனங்களில் இதுவரைக்கும் நம்முடைய அரசுப் பள்ளி மாணவர்கள் மிகக் குறைவான அளவில்தான் உயர்கல்விக்காகப் போயிருக்கின்றனர். இந்த நிலை மாறவேண்டும். எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும். கல்வியிலேயும் இதுதான் திராவிட மாடல் அரசினுடைய நிலைப்பாடு. அதிலும், உயர்கல்விக்குப் போகின்ற மாணவர்களுடைய எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். இதற்காக கொண்டுவரப்பட்டதுதான், அனைவருக்கும் ஐஐடி திட்டம்.
பொருளாதார காரணங்கள்:
தமிழ்நாட்டினுடைய எங்கேயோ ஒரு கிராமத்தில் இருக்கின்ற ஒரு அரசுப் பள்ளியில் படித்த ஒரு மாணவரால், ஏன் இதுவரைக்கும் I.I.T, N.L.U, நிஃப்ட் போன்ற நாட்டினுடைய முதன்மையான உயர்கல்வி நிறுவனங்களுக்குப் போக முடியாமல் இருந்தது என்றால், அதற்கு என்று தனியாக சமூகப் பொருளாதாரக் காரணங்கள் இருக்கிறது.
மாணவர்களுக்கான பாதையை உருவாக்கம்:
நம்முடைய குழந்தைங்களுக்கு நாட்டினுடைய உயர்கல்வி நிறுவனங்கள் எவை? அதில் நுழைய எப்படி விண்ணப்பிக்க வேண்டும்? போட்டித் தேர்வுகளுக்கு படிக்கும் முறை என்ன? இப்படி பல தகவல்கள் சென்று சேராமல் இருந்தது. இப்போது அந்தப் பாதைய உருவாக்கி இருக்கோம். அதுனால, இன்னைக்கு 225 மாணவர்கள் நாட்டின் முதன்மை கல்வி நிறுவனங்களுக்கு இந்த ஆண்டு போகப்போறாங்க. பள்ளிக் கல்வித் துறையோட கடுமையான முயற்சிகளாலதான் இது சாத்தியமாச்சு.
என் கண்முன்னாடி வளர்ந்த பையன் அன்பில்:
இங்கே இருக்கின்ற பள்ளி மாணவர்களான உங்களை மாதிரியே உங்கள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியும் ரொம்ப எனர்ஜெட்டியா இருக்கிறார். அவரை குழந்தையாக இருக்கின்ற காலத்திலிருந்து நான் பார்த்துக் கொண்டு வருகிறேன். என் கண் முன்னாடி வளர்ந்த பையன், இன்றைக்கு மாண்புமிகு அமைச்சர் என்று நான் சொல்லுகின்ற அளவுக்கு வளர்ந்திருக்கிறார். இந்தப் பள்ளிக் கல்வித் துறையில் அவர் செஞ்சிட்டு வர்ற பணிகள் - தலைமுறை தலைமுறைக்கும் பயனுள்ள பணிகளாக அமைந்திருப்பது நாம் கண்கூடாக பார்க்கிறோம்” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “கடந்த ஆண்டு முதன்மை கல்வி நிறுவனங்களுக்குச் சென்று அரசுப் பள்ளி மாணவர்களோட எண்ணிக்கை 75. இந்த ஆண்டு 225. இது மிகப்பெரிய சாதனை. அரசுப் பள்ளி மாணவர்களில் கடந்த ஆண்டு ஐ.ஐ.டி.க்கு போனவர் ஒரே ஒருத்தர்தான். ஆனால் இந்த ஆண்டு, 6 பேர் செல்கின்றனர், கடந்த ஆண்டு தேசிய தொழில்நுட்ப கழகம், இந்திய தகவல் தொழில்நுட்ப கழகங்கள், தேசிய உணவு தொழில்நுட்பம், தொழில் முனைவு மற்றும் மேலாண்மை நிறுவனம் ஆகியவற்றிற்கு சென்றவர்கள் 13 பேர். இந்த ஆண்டு 55 பேர் செல்கின்றனர்.
தமிழ்நாட்டில் மொத்தம் 225 அரசுப் பள்ளி மாணவர்கள் நாட்டின் முதன்மைக் கல்வி நிறுவனங்களுக்கு தமிழ்நாட்டிலிருந்து படிக்கப் போகிறீர்கள் என்பது நாம் எல்லோரும் பெருமைப்பட வேண்டிய விஷயம் இது. தனியார் பள்ளி மாணவர்களால் மட்டும்தான் இப்படிப்பட்ட நிறுவனங்களுக்கு போக முடியும் என்ற எண்ணத்தை உடைத்து, அரசுப் பள்ளி மாணவர்களும் போக முடியும் என்ற சாதனையை நீங்கள் படைத்திருக்கின்றீர். இது மூலமாக அரசுப் பள்ளியுடைய கல்வித் தரம் உயர்ந்திருக்கிறது என்ற உண்மை உலகுக்குத் தெரிய வந்திருக்கிறது.
எல்லாவற்றையும் விட மிக முக்கியமாக நான் நினைப்பது என்னவென்றால், உயர்கல்வி நிறுவனங்களுக்குள்ள அரசுப் பள்ளி மாணவர்களான நீங்களும் நுழையும்போதுதான் சமூகநீதி முழுமையடைகின்றது. 2022-23-ஆம் கல்வியாண்டில் தமிழ்நாட்டில் 25 மாவட்டங்களில், 25 மாதிரிப் பள்ளிகள் தொடங்கப்பட்டது. இவையெல்லாம் உண்டு உறைவிடப் பள்ளிகளாக செயல்பட்டு வருகிறது. இதிலிருந்து முதன்மைக் கல்வி நிறுவனங்களுக்குப் செல்வதற்கு விருப்பம் இருக்கும் மாணவர்களுக்கு சிறப்புப் பயிற்சி கொடுத்தோம். இந்தக் கல்வியாண்டில், மேலும் 13 பள்ளிகள் தொடங்கப்பட்டு இன்றைக்கு 38 மாவட்டங்களிலும், மாதிரிப் பள்ளிகள் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
மாணவர்களுடைய படிப்பதற்கான செலவை அரசே ஏற்றுக் கொண்டிருக்கிறது. படிப்ப முடிச்சிட்டு நீங்க வெளிய வரும்போது உங்களோட உலகம் ரொம்ப பெரியதாக இருக்கும். ஏற்றத்தாழ்வற்ற சமுதாயம் மலர வேண்டும் என்றால் எல்லாருக்கும் எல்லாம் கிடைக்கின்ற மாதிரி இருக்க வேண்டும். இந்த உயர்கல்வி மூலமா உங்க எல்லாருக்கும் அது சாத்தியப்பட்டிருக்கு. நீங்கள் இப்போது படிக்கப் போகின்ற கல்வி நிறுவனத்துக்கு அடுத்தடுத்த ஆண்டுகளில் சேரக்கூடிய அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நீங்கள்தான் வழிகாட்டணும்.
ஐஐடி, NIT, NLU நிறுவனங்களுடைய பொறுப்பான பதவியில் இருக்கின்ற அலுவலர்களிடம், நான் கேட்டுக் கொள்வதெல்லாம், “எங்கள் பிள்ளைகள் உங்களிடம் வருகிறார்கள். அவர்களை அரவணைத்துக் கொள்ளுங்கள். அவர்களுக்கு வழிகாட்டுங்கள்” என்பதுதான். மாணவர்களிடம் நான் பேசும்போதெல்லாம் சொல்கிறதுதான், மறுபடியும் இங்கேயும் சொல்ல விரும்புறேன். அரசு ஏற்படுத்தித் தருகின்ற வாய்ப்புகள் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
படிங்க , படிங்க, படிங்க, இதுதான் என்னோட வேண்டுகோள். படிக்கின்ற காலத்தில் கவனச்சிதறல்கள் இருக்கக்கூடாது. உங்களை இந்தளவுக்கு வளர்த்துவிட்ட உங்களுடைய பெற்றோர்கள், ஆசிரியர்களை மனதில் வைத்து செயல்படுங்கள். இன்னும் பல உயரங்கள் உங்களுக்காக காத்துக் கொண்டிருக்கிறது. ஒளிமயமான எதிர்காலம் உங்களை நோக்கி வந்துகொண்டிருக்கிறது” என பேசினார்.
இதையும் படிங்க:"பாரத மாதாவின் பாதுகாவலர்கள் அல்ல.. அவரை கொன்றவர்கள்.." மக்களவையில் ராகுல் காந்தி காட்டம்!