பிரக்ஞானந்தாவிற்கு வீடியோ கால் மூலம் வாழ்த்து தெரிவித்த முதல்வர் ஸ்டாலின் சென்னை:அஜர்பைஜான் நாட்டில் நடைபெற்ற ஃபிடே உலக சாம்பியன் செஸ் போட்டியின் அரையிறுதியில் அமெரிக்க வீரர் ஃபேபியா கருவானாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறி சாதனை படைத்தார், சென்னை வீரர் பிரக்ஞானந்தா. இறுதிப்போட்டியில் உலகின் நம்பர் 1 செஸ் வீரரான நார்வே நாட்டைச் சேர்ந்த மேக்னஸ் கார்ல்சனை எதிர்கொண்டார்.
மிகவும் விறுவிறுப்பாக ஆட்டம் நடந்த நிலையில் டைபிரேக்கர் போட்டியின் முதல் சுற்றில் 1-0 என்ற கணக்கில் நார்வேயின் கார்ல்சன் வெற்றி பெற்றார். இதில் இந்தியாவின் பிரக்ஞானந்தா, கடுமையான முயற்சியை மேற்கொண்டார். இதனையடுத்து டைபிரேக்கர் முறையின் இரண்டாவது சுற்றில் கறுப்பு நிறக் காய்கள் உடன் விளையாடிய பிரக்ஞானந்தா கடும் முயற்சி உடன் விளையாடினார்.
இறுதியாக டைபிரேக்கர் முறையின் 2வது சுற்றில் நார்வேயின் கார்ல்சன் உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்றார். இருப்பினும் இறுதி வரை போராடிய பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின், மத்திய அமைச்சர் அனுராத் தாக்கூர், முன்னாள் செஸ் சாம்பியனான விஸ்வநாதன் ஆனந்த் ஆகியோர் வாழ்த்துகள் தெரிவித்து உள்ளனர்.
மேலும், இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பதிவில், “செஸ் உலகின் 2 மற்றும் 3ஆம் தர வீரர்களை தோற்கடித்து, 2023 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் முன்னேறியது வியப்பில் ஆழ்த்தியுள்ளது. உங்கள் சாதனை இந்தியாவின் 140 கோடி மக்களின் தேசியக் கனவுகளுடன் எதிரொலிக்கிறது. முழு தேசமும் உங்களை நினைத்து பெருமை கொள்கிறது, பிரக்ஞானந்தா. உங்கள் வெள்ளிப் பதக்கம் வரவிருக்கும் தலைமுறைகளை ஊக்குவிக்கும் மைல்கற்களாக அமையும்” என தெரிவித்துள்ளார்.
இதனை அடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரக்ஞானந்தாவை வீடியோ கால் மூலம் தொடர்பு கொண்டு தனது வாழ்த்துக்களையும், பாராட்டுதல்களையும் தெரிவித்தார். அதில், இந்த உலக சாம்பியன் செஸ் தொடரில் பிரக்ஞானந்தா நிச்சயம் வெல்வார் என்று ஆவலாக இருந்ததாகவும், இருப்பினும் கடின முயற்சி செய்ததாகவும் பிரக்ஞானந்தாவை பாராட்டினார்.
மேலும், அடுத்த முறை கண்டிப்பாக உலக சாம்பியன்ஷிப் பட்டத்தை வெல்வீர்கள் என்றும் வாழ்த்தினார். இந்தியா வரும்போது அவர்களை வரவேற்க விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருவார் என்றும் தெரிவித்தார். மேலும், பிரக்ஞானந்தாவின் தாய் நாகலட்சுமிக்கும் தனது வாழ்த்துக்களை முதலமைச்சர் தெரிவித்தார்.
இதையும் படிங்க:உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டம் வென்றார் கார்ல்சன்.. இறுதி வரை போராடிய பிரக்ஞானந்தா!