சென்னை: திருவள்ளூர் மாவட்டம் மோரை பகுதியைச் சேர்ந்த ஸ்டீபன்ராஜ் - சௌபாக்கியம் தம்பதியின் 9 வயது மகள் டானியா. இவர், அரிய வகை முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு வந்தார். ஆறு ஆண்டுகளாக பல்வேறு மருத்துவமனைகள் ஏறி பல சிகிச்சை அளிக்கப்பட்டும் நோய் குணமாகாமல் இருந்தது.
இதை தொடர்ந்து சிகிச்சை அளித்திட அச்சிறுமியின் பெற்றோரிடத்தில் போதிய வசதியில்லாத காரணத்தினால் மகளின் முகச்சிதைவு நோய்க்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள தமிழ்நாடு முதலமைச்சரிடம் உதவி கோரிய நிலையில், சட்டப்பேரவை உறுப்பினர் சா.மு.நாசர் மேற்பார்வையில் சிறுமி டானியாவிற்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிடப்பட்டது. அதனடிப்படையில் தண்டலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிறுமிக்கு முகசீரமைப்பு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
அந்தவகையில் கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் 23ஆம் தேதி இலவசமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. சிகிச்சையின் பின் சிறுமியின் முகம் இயல்பு நிலைக்கு திரும்பி வந்தது. முதல் சிகிச்சை வெற்றிகரமாக முடிந்ததை அடுத்து முதலமைச்சர் ஸ்டாலின் 2022 ஆகஸ்ட் 29ஆம் தேதியன்று தண்டலம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு நேரில் சென்று முகசீரமைப்பு அறுவை சிகிச்சை மேற்கொண்ட சிறுமி டானியவை சந்தித்து நலம் விசாரித்தார்.
அதன்பின் மருத்துவரின் பரிந்துரையின்படி சிறுமியின் முகம், வாய், தொண்டை குழாய் பகுதிகள் இயல்பு நிலைக்கு திரும்ப தொடர் சிகிச்சைகள் மேற்கொள்ள வேண்டியிருந்தது. அதன்படி இரண்டாம் கட்ட அறுவை சிகிச்சைக்காக தண்டலம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஜனவரி 5ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார். இதனிடையே முதலமைச்சர் ஸ்டாலின் செல்போன் வாயிலாக சிறுமியிடம் நலம் விசாரித்தார்.