சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (20.1.2022) தலைமைச் செயலகத்தில், பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் பக்தர்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றும் பொருட்டு 23 கோடியே 81 இலட்சத்து 78 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள சுத்திகரிப்பு குடிநீர் திட்டம், அன்னதாகக் கூடம், மின்தூக்கி மற்றும் நாதமணி மண்டபம் ஆகியவற்றை காணொலிக் காட்சி வாயிலாகத் திறந்து வைத்தார்.
தமிழ்நாட்டின் முதன்மைத் திருக்கோயில் மற்றும் முருகனின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படைவீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வருகை புரியும் பக்தர்களின் அடிப்படை வசதியினை முழுமையாக பூர்த்திசெய்யும் பொருட்டு பழனி, பாலசமுத்திரம் கிராமம் அருகில் உள்ள பாலாற்றில் தடுப்பணை கட்டி அதிலிருந்து மலைக்கோயில், தங்கும் விடுதிகள் மற்றும் சார்பு நிறுவனங்கள் ஆகியவற்றிற்கு நாள் ஒன்றுக்கு 2.31 MLD தண்ணீர் வழங்கும் வகையில் 22 கோடியே 72 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் பணிகள் முடிக்கப்பட்டு தற்போது பக்தர்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
திருக்கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வருகைபுரியும் முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்காக மின்கல மகிழுந்து (Battery Car) பயன்பாட்டில் உள்ளது.
அதனைத் தொடர்ந்து கம்பிவட ஊர்தி மேல்நிலையத்திலிருந்து மலைக்கோயில் வெளிப்பிரகாரத்திற்கு சிரமமின்றி சென்றுவர ஏதுவாக 13 நபர்கள் செல்லும் வகையில் 23 இலட்சத்து 98 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் மின்தூக்கி (Lift) உபயதாரர் மூலம் அமைக்கப்பட்டு தற்போது பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
மலைக்கோயிலில் நடைபெறும் ஆறுகால பூஜையின்போது மணி ஓசை எழுப்பும் வகையில் புதியதாக நாதமணி மண்டபம் 27 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ளது.