சென்னை:சமீபத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் டெல்லியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் மேற்கு டெல்லி வினோத்நகரில் உள்ள அரசு மாதிரி பள்ளியைப் பார்வையிட்டார். அங்கு மாணவ மணிகளுக்கு டிஜிட்டல் முறையில் எவ்வாறு பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன என்பதைக் கேட்டறிந்தார். பின்னர் இது குறித்துப் பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் டெல்லியைப் போல் மாதிரி அரசுப் பள்ளியை தமிழ்நாட்டில் விரைவில் நாங்கள் உருவாக்கப்போகிறோம் எனத் தெரிவித்து இருந்தார்.
முதலமைச்சர் ஆய்வு செய்யத்திட்டம்:இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்டம், பல்லாவரத்தில் உள்ள மறைமலை அடிகள் அரசு மேல்நிலைப்பள்ளியில் தனியார் அமைப்பு உதவியுடன் மாதிரிப்பள்ளி அமைக்கப்பட்டு வருகிறது. இதைப்பற்றி தகவலறிந்து நாளை இப்பள்ளியை முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்ய இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதற்கான ஏற்பாடுகளை பள்ளி நிர்வாகம் செய்து வருகிறது.
பல்லாவரம் மறைமலை அடிகள் அரசு மேல்நிலைப்பள்ளி 1960ஆம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது. இதில் 873 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். அங்கு தமிழ் மற்றும் ஆங்கில வழியில் கல்வி பயின்று வருகின்றனர். இந்தப் பள்ளியில் சமீபகாலமாக தனியார் தொண்டு நிறுவனங்களின் உதவியுடன் தனியார் பள்ளிகளுக்கு நிகராக மாற்றப்பட்டு வருகிறது.
பல்லாவரம் மறைமலை அடிகள் அரசுப்பள்ளியில் தனியார் தொண்டு அமைப்புடன் இணைந்து கண்காணிப்பு கேமராக்கள், ஸ்மார்ட் வகுப்புகள், நவீன கழிப்பறைகள், உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் ஆகிய வசதிகள் அரசுப்பள்ளியில் மேம்படுத்தப்பட்டுள்ளன. மேலும் தொடுதிரை வசதிகள் மூலம் பாடங்களைக் கற்பிக்க உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகிறது.
ரூ.1.50 கோடி செலவில் உள்கட்டமைப்பு வசதிகள்:இதுகுறித்து பேட்டி அளித்த பள்ளி தலைமையாசிரியர் ரவி காசி வெங்கட்ராமன் கூறுகையில், “பல்லாவரம் மறைமலை அடிகளார் அரசுப்பள்ளியில் தனியார் தொண்டு நிறுவனத்தின் உதவியுடன் ரூ.1.50 கோடி செலவில் பள்ளியின் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. அதேபோல் ரூ.6 லட்சம் செலவில் மூன்று ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கப்பட்டு மாணவர்களின் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.
மாணவர்களின் அறிவியல் அறிவைத்துாண்டும் விதமாக ரூ.25 லட்சம் செலவில் அரசுப் பள்ளிகளிலேயே முதல் முறையாக ’இளம் கலாம் அறிவியல் ஆய்வு மையம்’ அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தை பிற பகுதி அரசுப் பள்ளி மாணவர்கள் பார்வையிட்டுச்செல்கின்றனர். இதுவரை சுமார் 2500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பார்வையிட்டுச் சென்றுள்ளனர்.