சென்னை:தலைமைச் செயலகத்தில் பொது மற்றும் மறுவாழ்வுத் துறையின் வாயிலாக மேற்கொள்ளப்பட்டு வரும் இலங்கைத் தமிழ் அகதிகள் மறுவாழ்வு உள்ளிட்டவை குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (ஜூலை. 23) ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
அப்போது வெளிநாடு வாழ் தமிழர்களுக்கு காப்பீட்டுத் திட்டம், அடையாள அட்டை உள்ளிட்டவை வழங்குவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.
இந்த ஆய்வுக் கூட்டத்தில், கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி, வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ். மஸ்தான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பிரச்னைகளுக்குத் தீர்வுகாண வழிகாட்டுதல் குழு
அப்போது பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "வெளிநாடு வாழ் தமிழர்களின் நலன் பேணிடவும், அங்கு பாதிப்புக்கு உள்ளானோர்க்கு உதவிடவும், நாடு திரும்பிய வெளிநாடுவாழ் தமிழர்களின் வாழ்வாதாரத்திற்குத் துணை நிற்கவும் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.
இலங்கைத் தமிழர்களின் பிரச்னைகளுக்கு தீர்வுகாண வழிகாட்டுதல் குழு அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.
முகாம்வாழ் இலங்கைத் தமிழர்களுக்கு வீடுகள் கட்டுவதற்கும், குடிநீர், கழிவறை வசதி, தெருவிளக்கு, மின்வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்திடவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.
இதையும் படிங்க:திருவள்ளுவர் சிலைக்குச் செல்ல தொங்கு பாலம் - எ.வ. வேலு