தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தொழிலாளர்களே மாநில வளர்ச்சியின் முதுகெலும்பு - முதலைச்சர் ஸ்டாலின் - cm stalin

உழைப்பாளர் தினத்தையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது வாழ்த்தினை தெரித்துள்ளார்.

உழைப்பாளர் தின வாழ்த்து செய்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
உழைப்பாளர் தின வாழ்த்து செய்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

By

Published : Apr 30, 2022, 5:17 PM IST

சென்னை: இதுகுறித்து முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சிகாகோ நகரில் தொழிலாளர்கள் வரலாற்றுப் புகழ்பெற்ற பிரமாண்டமான பேரணியை நடத்தி தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்து பெற்ற உன்னதமான உரிமைகளை நினைவுகூரும் மே 1ஆம் நாளை முன்னிட்டு தொழிலாளர்கள் அனைவருக்கும் எனது மே தின வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

தொழிலாளர்களின் உற்ற தோழனாகவும், அவர்களது உரிமைக்குரலைக் காதுகொடுத்து கேட்டு, அவற்றை நிறைவேற்றி வைக்கும் அரசாக, திராவிட முன்னேற்றக் கழக அரசு எப்போதும் விளங்கி வருகிறது. ஒவ்வொரு தொழிலாளரின் எதிர்காலத்தையும் இனிமையாக்கிட, வாழ்வாதாரத்திற்குத் தேவையான அடிப்படை வசதிகளை வழங்கிட எண்ணற்ற நலத்திட்டங்களை நிறைவேற்றிய கலைஞருடைய வழியில் நடைபோடும் நமது திராவிட மாடல் ஆட்சியும், தொழிலாளர்களின் எண்ணங்களை அறிந்து, அவர்களுக்கான திட்டங்களை நிறைவேற்றி வருகிறது.

திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில்தான் மே நாளன்று ஊதியத்துடன் கூடிய விடுமுறை நாள் என்று அறிவிக்கப்பட்டது. கலைஞர் முதன்முதலில் முதலமைச்சராக இருந்தபோதுதான் பேருந்துகள் நாட்டுடைமையாக்கப்பட்டு, போக்குவரத்துக் கழகங்கள் உருவாக்கப்பட்டன. தொழிலாளர் நலனுக்காகத் தனியாக ஒரு அமைச்சகம் உருவாக்கப்பட்டது.

“நேப்பியர் பூங்கா” மே தினப் பூங்கா என்று பெயர் சூட்டி தொழிலாளர்களின் உரிமைப் போரை நினைவூட்டி போற்றப்பட்டது. அல்லும் பகலும் உழைக்கும் தொழிலாளர்களுக்கு போனஸ் வழங்கியது. ஊக்கத் தொகை அளித்தது. விவசாயத் தொழிலாளர் நல வாரியம் உள்ளிட்ட அமைப்பு சாராத் தொழிலாளர் வாரியங்களை ஏற்படுத்தி, தொழிலாளர்களுக்கு பல்வேறு முத்தான நலத்திட்டங்களையும் தொழிலாளர்களின் உயிர் காக்கும் மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்களையும் வழங்கியது கழக அரசுதான்.

தற்போது ஆட்சிப் பொறுப்பிற்கு வந்து ஓராண்டு நிறைவடையும் முன்பே கடை மற்றும் நிறுவனங்களில் அனைத்துத் தொழிலாளர்களுக்கும் பணிபுரியும் இடத்தில் இருக்கை வசதி அளிக்க வேண்டும் என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க “தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் (திருத்த) சட்டம் 2021-ஐ நிறைவேற்றியிருக்கிறது.

தொழிலாளர்கள் பணி நேரம் முழுவதும் நின்றுகொண்டே பணி செய்ய வேண்டிய நிலை அகற்றப்பட்டுள்ளது. அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியங்களில் 10,17,481 புதிய உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டு, 1,85,660 பயனாளிகளுக்கு முன்னெப்போதும் இல்லாத வகையில் 247.49 கோடி ரூபாய் கோடி அளவில் உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது.

இதில் 50 ஆயிரம் தொழிலாளர்களுக்கு ஒரே நாளில் நானே தலைமையேற்று நலத்திட்ட உதவிகளை வழங்கினேன். எல்லாவற்றிற்கும் முத்தாய்ப்பாக உழைக்கும் மகளிர் தொழிலாளர்கள் தங்குவதற்கு தங்குமிடம் கட்டுவதற்கு ஆணையிட்டு- பெண்ணுரிமைக்கு மகுடம் சூட்டும் அரசாக எனது தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழக அரசு விளங்கி வருகிறது என்பதை தொழிலாளர் தோழர்கள் அனைவரும் நன்கு அறிவர்.

தொழிலாளர்கள் தமிழ்நாடு வளர்ச்சியின் முதுகெலும்பு. அவர்களின் நலன் காக்கும் அரசாக நமது அரசு என்றும் விளங்கும். தொழிலாளர்களின் உரிமைகளுக்கும், நலனுக்கும் “கேடயமாகவும், போர்வாளாகவும்” திராவிட முன்னேற்றக் கழகமும் - திராவிட முன்னேற்றக் கழக அரசும் எப்போதும் திகழும்.

“தொழில் அமைதி” மட்டுமே தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்கான அடித்தளமாக இருக்கும் என்பதை நித்தமும் நெஞ்சில் கொண்டு, தொழிலாளர்களின் வாழ்வில் எழுச்சி பொங்கிடவும், மகிழ்ச்சி தவழ்ந்திடவும் மீண்டும் மே நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க:18 வயது திருநங்கைகளுக்கும் உதவி தொகை வழங்க பரிசீலனை - அமைச்சர் கீதா ஜீவன்

ABOUT THE AUTHOR

...view details