சென்னை: ஊழல் புரிந்த முன்னாள் அதிமுக அமைச்சர்கள் மீது வழக்கு தொடர அனுமதி வழங்குவது தொடர்பான கோப்புகளை ஆளுநர் ஆர்.என். ரவி கிடப்பில் போட்டுள்ளதாகவும், சென்னை உயர் நீதிமன்றம் விசாரணைக்கு உத்தரவிட்ட குட்கா வழக்கில் முன்னாள் அதிமுக அமைச்சர்கள் மீது வழக்குத் தொடர சிபிஐ கோரிய அனுமதியைக்கூட வழங்காமல், ஆளுநர் கிடப்பில் போட்டு வைத்திருப்பது விசித்திரமாக உள்ளது என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முக்கு கடிதம் எழுதியுள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயல்பாடுகள் குறித்து அதிர்ப்த்தியில் இருந்துவந்த நிலையில் முதலமைச்சர் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவுக்கு நேற்று (ஜூலை 8) கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் தமிழ்நாடு மற்றும் தமிழ்நாட்டு மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பொருள் குறித்து தற்போது குடியரசுத் தலைவரின் கவனத்திற்குக் கொண்டு வர விரும்புவதாக தெரிவித்துள்ளார். மேலும் கடிதத்தில் அவர் கூறியுள்ளதாவது,
குற்றவாளிகள் மீது வழக்குத் தொடர அனுமதி வழங்குவதில் தேவையற்ற தாமதம் ஏன் ?
ஊழல் புரிந்த முன்னாள் அ.தி.மு.க., அமைச்சர்கள் பி.வி.ரமணா என்ற பி.வெங்கட்ரமணா, டாக்டர் சி. விஜயபாஸ்கர், கே.சி. வீரமணி, எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது வழக்கு தொடர அனுமதி வழங்குவது தொடர்பான கோப்புகளை ஆளுநர் ஆர்.என். ரவி கிடப்பில் போட்டுள்ளதாக கூறியுள்ளார். சென்னை உயர் நீதிமன்றம் விசாரணைக்கு உத்தரவிட்ட குட்கா வழக்கில் முன்னாள் அதிமுக அமைச்சர்கள் மீது வழக்குத் தொடர சிபிஐ கோரிய அனுமதியைக்கூட வழங்காமல், ஆளுநர் கிடப்பில் போட்டு வைத்திருப்பது விசித்திரமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குற்றவாளிகளை ஆதரித்தல் மற்றும் காவல்துறை விசாரணையில் தலையிடுதல்
மேலும் அவர் கடிதத்தில் கிரிமினல் குற்றங்கள் குறித்து ஆளுநர் ஆர்.என்.ரவி ஆதாரமற்ற மற்றும் தவறான அறிக்கைகளை வெளியிட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். 2022-ஆம் ஆண்டு செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களுக்கு இடையில், சிதம்பரம் நடராஜர் கோயிலைச் சார்ந்த இரண்டு தீட்சிதர்கள் மேல் தொடுக்கப்பட்ட குழந்தைத் திருமணப் புகார்களைத் தொடர்ந்து சிதம்பரம் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். ஆதாரங்களின் அடிப்படையில், இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 366 (ஏ) மற்றும் குழந்தைத் திருமண தடுப்புச் சட்டம், 2006-இன்கீழ் நான்கு வழக்குகள் காவல்துறையினரால் பதிவு செய்யப்பட்டன என்றும் கடிதத்தில் எழுதியுள்ளார். இது தொடர்பாக 8 ஆண்கள், 3 பெண்களை கைது செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.