சென்னை: கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற திமுக அரசின் சாதனைகளை விளக்கும் புகைப்பட கண்காட்சி நிகழ்ச்சியில் திமுகவின் 2 ஆண்டு சாதனை குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், “உங்கள் வீட்டில் குழந்தைகள் இருந்தார்கள் என்றால், அந்த குழந்தைகளுடைய ஊட்டச்சத்தை உறுதி செய்யக்கூடிய திட்டப்படி சத்தான உணவை நம் அரசு வழங்குகிறது. உங்கள் வீட்டில் அரசு பள்ளியில் படிக்கின்ற ஒரு மாணவனோ - மாணவியோ இருந்தால், அவர்களுக்குக் காலை சிற்றுண்டியை நம் அரசு வழங்குகிறது.
உங்கள் வீட்டில் அரசுப் பள்ளியில் படித்து, கல்லூரிக்குச் செல்லுகின்ற ஒரு மாணவி இருந்தால், புதுமைப்பெண் திட்டம் மூலமாக அவர்களுக்கு மாதா மாதம் ரூ.1000 நமது அரசு வழங்குகிறது. உங்கள் வீட்டில் இருக்கின்ற எல்லா பெண்களுக்கும் பேருந்தில் கட்டணமில்லாமல் பயணம் செய்கிற வசதியை நம் அரசு உருவாக்கித் தந்திருக்கிறது. உங்கள் வீட்டில் கல்லூரிக்குப் போகிற மாணவர் இருந்தால், அவரை எல்லா விதத்திலும் வேலைவாய்ப்புக்குத் தகுதிப்படுத்த, 'நான் முதல்வன்' திட்டம் மூலமாக நம் அரசு பயிற்சி தருகிறது.
மேலும், விவசாயி இருந்தால், அவருக்கு நம் அரசு இலவச மின் இணைப்பு கொடுக்கிறது. மகளிருக்கு சுய உதவிக் குழுக்களின் மூலமாக அதிக கடனுதவியை நம் அரசுதான் கொடுத்துக் கொண்டிருக்கிறது. திருநங்கையர் - மாற்றுத்திறனாளிகள் - கோயில் பூசாரிகள் - மீனவர்கள் - தொழிலாளர்கள் என அனைத்து வகைப்பட்ட மக்களுக்கும் உதவிகளை வழங்கி கைதூக்கி விடுகிறது நம் அரசு.
அரசு ஊழியர்களின் நலன் காத்து அவர்களைப் பாதுகாத்து வேலைவாய்ப்புகளை உருவாக்கியும் தருகிறது நம் அரசு. புதிய தொழில் முதலீடுகள் மூலமாக ஏராளமான வேலை வாய்ப்புகளை உருவாக்கி வருவது நம்முடைய அரசு. ஆண் - பெண், கிராமம் - நகரம், குழந்தைகள் - முதியோர் என எல்லா வகையிலும், எல்லாருக்குமான வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டு செயல்படுவது நமது அரசு. மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்றார் பேரறிஞர் அண்ணா. மக்களின் மகிழ்ச்சியே என்னுடைய மகிழ்ச்சி.
மாதவரம் பால்பண்ணை அருகே தள்ளுவண்டி உணவுக்கடை வைத்திருந்தவர் மேரியம்மாள். கைம்பெண் உதவித்தொகை கேட்டுக் கடந்த ஆட்சியில் விண்ணப்பித்து அவருக்கு அது கிடைக்கவில்லை. நம்முடைய ஆட்சி வந்ததும், மாதந்தோறும் ரூ.1000 அவருக்கு உதவித் தொகையாக வழங்கப்படுகிறது. மேரியம்மாளின் மகிழ்ச்சிதான், என்னுடைய மகிழ்ச்சி.
தரமணியைச் சேர்ந்த சஜீத், செவித்திறன் குறைபாடு கொண்ட சிறுவன். அந்த கருவியை வாங்குவதற்கு அவர்களிடம் பணமில்லை. அந்தச் சிறுவனுக்கு நானே என் கையால், காதொலிக் கருவியைப் பொருத்திவிட்டேன். அருகில் இருந்து வரக்கூடிய சத்தங்களையெல்லாம் கேட்டு சஜீத் சிரித்தார், அந்த அழகைப் பார்த்தபோது எனக்கு மிகவும் மகிழ்ச்சி ஏற்பட்டது.
டானியா என்ற பள்ளிச் சிறுமியைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர், அவருக்கு இப்போது 9 வயது. நான்காம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறார்கள். முகச்சிதைவு நோய் காரணமாகப் பாதிக்கப்பட்டிருந்த அந்தச் சிறுமியை, கூட படிக்கிற சில மாணவர்கள் புறக்கணிக்கிறார்கள் என்று செய்தி கிடைத்தது.
உடனே அவரை மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை கொடுத்தோம். இப்போது மகிழ்ச்சியாக பள்ளிக்கு சென்று வருகிறார். அவர்களுடைய வீட்டிற்கே நேரில் சென்று அந்த சிறுமியின் முகத்தில் அரும்பிய அந்தப் புன்னகையைப் பார்த்து, வாழ்த்தி விட்டு வந்தபோது எனக்கு ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.
மெரினா கடலில் கால் நனைக்கும் போது மாற்றுத்திறனாளி பவானி கணேஷ் அவர்கள் அடைந்த மகிழ்ச்சிதான் என்னுடைய மகிழ்ச்சி. விளிம்பு நிலை மக்களாக இருக்கிற இருளர் – நரிக்குறவர் மக்களுக்கும் என்ன தேவை என்று கவனித்து எல்லா மாவட்டத்திலும் அவர்களுக்குத் தேவையான வசதிகளைச் செய்து கொடுத்து, அவர்களுடைய சுயமரியாதையையும் மாண்பையும் நிலைநாட்டியிருக்கிறோம்.