சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் இன்று (ஆகஸ்ட்11) சென்னை தீவுத்திடலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் சார்பில் 14 கோடியே 90 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்ட 100 பேருந்துகளை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் 19.10.2022 அன்று சட்டப்பேரவையில் 110-விதியின் கீழ் வெளியிட்ட அறிவிப்பில் பொதுமக்களின் பேருந்து பயன்பாடு அதிகமாக உள்ள நிலையில் புதிதாக ஆயிரம் பேருந்துகளை வாங்குவதற்கும், 500 பழைய பேருந்துகளை புதுப்பிக்கவும் 500 கோடி ரூபாய் போக்குவரத்து கழகத்திற்கு தமிழக அரசு ஒதுக்கீடு செய்வதாக கூறினார்.
அறிவிப்பின்டி, பொதுமக்களின் போக்குவரத்து தேவைகளை பூர்த்தி செய்கின்ற வகையிலும், அரசுப் போக்குவரத்து கழகங்களின் பேருந்துகளை மேம்படுத்திடும் வகையிலும், அடிச்சட்டம் நல்ல நிலையிலுள்ள 1000 பழைய பேருந்துகளை 152.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதுப்பித்திட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், அதன் முதற்கட்டமாக, விழுப்புரம் அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு 16 பேருந்துகளும், சேலம் அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு 15 பேருந்துகளும், கும்பகோணம் அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு 37 பேருந்துகளும், திருநெல்வேலி அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு 32 பேருந்துகளும், என மொத்தம் 100 பேருந்துகள் 14 கோடியே 90 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்காக இன்று கொண்டு வரப்பட்டது.