தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆயுத பூஜை, விஜயதசமி வாழ்த்து தெரிவித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

சென்னை: தமிழ்நாட்டு மக்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

By

Published : Oct 24, 2020, 10:28 AM IST

இதுகுறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “நவராத்திரி பண்டிகையின் இறுதி நாளான ஒன்பதாவது நாளில் ஆயுத பூஜை திருநாளையும், அதற்கடுத்த பத்தாவது நாளில் விஜயதசமி திருநாளையும் பக்தியுடனும், மகிழ்ச்சியுடனும் கொண்டாடும் எனது அன்பிற்குரிய தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது உளம் கனிந்த ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

மனித வாழ்வில் ஏற்றம் பெற ஆற்றல், செல்வம் மற்றும் கல்வி ஆகியவை இன்றியமையாதது ஆகும். மக்கள் அனைவரும் தங்கள் வாழ்வில் ஆற்றலில் மிகுந்து, செல்வத்தில் சிறந்து, கல்வியில் உயர்ந்து விளங்கிட மலைமகளையும், திருமகளையும், கலைமகளையும் போற்றி வணங்குவது நவராத்திரி பண்டிகையின் சிறப்பாகும்.

செய்யும் தொழிலே தெய்வம் என்று மதித்து, தொழிலின் மேன்மையை போற்றும் வகையில், மக்கள் தங்களது தொழிலுக்கு ஆதாரமாக விளங்குகின்ற தொழிற்கருவிகளை பூஜைக்குரிய பொருட்களாக வைத்து, மேன்மேலும் தொழில் வளர இறைவனை வேண்டி வழிபட்டு ஆயுத பூஜை திருநாளை கொண்டாடுவார்கள்.

விஜயதசமி திருநாளன்று தொடங்கப்படும் காரியங்கள் அனைத்தும் வெற்றி பெறும் என்ற நம்பிக்கையில், மக்கள் இறைவனை வணங்கி, கல்வி, கலை, தொழில் போன்ற நற்காரியங்களை தொடங்கி வெற்றித் திருநாளான விஜயதசமி திருநாளை கொண்டாடுவார்கள்.

இந்த சிறப்புமிக்க ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி திருநாட்களை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் தமிழ்நாட்டு மக்கள் அனைவரும், எல்லா நலன்களையும், வளங்களையும் பெற்று, வாழ்வில் வெற்றி மேல் வெற்றி பெற்று சீரோடும், சிறப்போடும் வாழ்ந்திட வேண்டும் என்று வாழ்த்தி, எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை உரித்தாக்கிக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details