தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மேற்கூரை அமைக்கும் கூடுதல் தொகை ரூ.1.20 லட்சமாக உயர்த்தி உத்தரவு!

சென்னை: பிரதம மந்திரி குடியிருப்பு திட்ட பயனாளிகளுக்கு வழங்கப்படும் கான்கிரிட் மேற்கூரை அமைப்பதற்கான கூடுதல் நிதியை ரூ.50ஆயிரத்திலிருந்து ரூ. 1 லட்சத்து 20 ஆயிரமாக உயர்த்தி வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

Chief Minister Edappadi Palanisamy Order to increase the amount of roof erection to 1.20 lakhs
Chief Minister Edappadi Palanisamy Order to increase the amount of roof erection to 1.20 lakhs

By

Published : Dec 22, 2020, 12:27 PM IST

இதுதொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டில் பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம் (ஊரகம்) மத்திய அரசு பங்களிப்புடன் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் இதுவரை 5 லட்சத்து 27 ஆயிரத்து 552 வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, 4 லட்சத்து ஆயிரத்து 848 வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன.

பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தின் (ஊரகம்) கீழ் ஒரு வீட்டிற்கான அலகுத் தொகை ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் ஆகும். இதில் மத்திய அரசின் பங்குத் தொகை ரூ.72 ஆயிரம் மற்றும் மாநில அரசின் பங்குத் தொகை ரூ.48 ஆயிரம் ஆகும். இத்துடன் கான்கிரீட் மேற்கூரை அமைப்பதற்காக தமிழ்நாடு அரசு, கூடுதல் நிதியாக ரூ.50 ஆயிரம் ஒவ்வொரு வீட்டிற்கும் அளித்து வருகிறது. இத்தொகையுடன் ஒரு வீட்டிற்கான மொத்த அலகு தொகை ரூ.1 லட்சத்து 70 ஆயிரமாக உள்ளது.

இத்திட்டத்தின் செயல்பாடுகள் குறித்த ஆய்வில், கட்டுமானப் பொருள்களின் விலையேற்றம், கரோனாவினால் வாழ்வாதாரம் பாதிப்பு உள்ளிட்ட காரணங்களால் வீட்டினை முழுமையாக கட்ட முடியாத நிலை இருப்பது தெரியவந்தது.

எனவே ஏழை எளிய மக்கள் பயன்பெரும் வகையில், தமிழ்நாடு அரசால் ஏற்கனவே மேற்கூரை அமைக்க கூடுதலாக வழங்கப்பட்டு வந்த ரூ.50 ஆயிரத்தை 1 லட்சத்து 20 ஆயிரமாக உயர்த்தி உத்தரவிடப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒவ்வொரு வீட்டிற்கும் அலகு தொகை ரூ.1 லட்சத்து 70 ஆயிரத்திலிருந்து ரூ.2 லட்சத்து 40 ஆயிரமாக உயர்த்தப்படுகிறது.

இந்த தொகையுடன் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ரூ.23,040 மற்றும் தனி நபர் இல்லக் கழிப்பறை கட்ட ரூ.12 ஆயிரம் சேர்த்து மொத்தம் ஒரு வீட்டிற்கு ரூ.2 லட்சத்து 75 ஆயிரத்து 40 ரூபாய் வழங்கப்படும். இதற்காக தமிழ்நாடு அரசால் கூடுதலாக ரூ.1,805.48 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். இதன்மூலம் சுமார் 2 லட்சத்து50 ஆயிரம் பயனாளிகள் பயன்பெறுவர்.

இந்த கூடுதல் நிதி உதவியால் கட்டி முடிக்காமல் உள்ள வீடுகள் கட்டி முடிக்கப்படுவதுடன், தாங்களே கட்ட வசதியில்லாத பயனாளிகளுக்கும் வீடுகள் ஒதுக்கப்பட்டு, தமிழ்நாடு ஊரக வீட்டுவசதி மற்றும் உட்கட்டமைப்பு வசதி மேம்பாட்டுக் கழகத்தின் உதவியோடு கட்டி முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: மத்திய அரசின் வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடு: சிபிஐ விசாரணைக்கு வலியுறுத்தல்

ABOUT THE AUTHOR

...view details