சென்னை:சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு நேற்று (ஏப்.06) ஒரே கட்டமாக முடிவடைந்த நிலையில், சென்னையின் 16 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு உள்பட்ட வாக்குப்பதிவு மையங்களில் இருந்து வாக்குப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு இயந்திரங்கள் மற்றும் விவிபேட் இயந்திரங்கள் உள்ளிட்டவை, துப்பாக்கி ஏந்திய காவல்துறையின் பாதுகாப்புடன் மொபைல் யூனிட் மூலம் ராணி மேரி கல்லூரி, லயோலா கல்லூரி, அண்ணா பல்கலைகழகம் ஆகிய வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு, பத்திரமாக பூட்டி, சீல் வைக்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.
விரைவில் இந்தப் பணிகள் அனைத்தும் முடிவடையவுள்ள நிலையில், மூன்று மையங்களும் துணை ராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் முழுவதுமாக கொண்டுவரப்பட்டுள்ளன. மூன்று மையங்களுக்கும் துணை ராணுவத்தினர் உள்பட மூன்றாயிரம் பேர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். குறிப்பாக ஒவ்வொரு மையத்திலும் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
முதல் அடுக்கில் துணை ராணுவத்தினரும், இரண்டாம் அடுக்கில் தமிழ்நாடு சிறப்பு காவல்படை மற்றும் ஆயுதப்படையினரும், மூன்றாம் அடுக்கில் உள்ளூர் காவல் துறையினரும் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஒட்டுமொத்தமாக ஏழு கம்பெனி துணை ராணுவத்தினர் மூன்று வாக்கு எண்ணும் மையங்களிலும் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.