சென்னை: கரோனா தொற்றை குறைப்பதற்காக மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. குறிப்பாக கரோனா தடுப்பூசி செலுத்துவதற்காக தனி கவனத்தை செலுத்தி வருகிறது. சென்னையில் மொத்தம் 45 கரோனா தடுப்பூசி மையம், 19 நகர்ப்புற சமூக சுகாதார மையங்களில் மக்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
நேற்று (ஜூலை.12) வரை மொத்தமாக 27 லட்சத்து 23 ஆயிரத்து 629 நபர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது. கரோனா தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக சென்னையில் தடுப்பூசி செலுத்துவோர் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது.
நாளை கோவாக்சின் தடுப்பூசி
மேலும் கோவாக்சின் தட்டுப்பாடு காரணமாக கடந்த ஒரு வாரமாக மாநகராட்சி தடுப்பூசி முகாம் செயல்படாமல் இருந்தது. இந்நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு பிறகு சென்னையில் நாளை (ஜூலை.14) கோவாக்சின் தடுப்பூசி போடப்படும் என மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, 45 கரோனா தடுப்பூசி மையத்தில் மட்டும் பதிவு செய்தவர்கள் 100 பேருக்கும், நேரடியாக வந்து தடுப்பூசி போட்டுக்கொள்பவர்களுக்கு 100 என்ற விதத்தில் மொத்தம் 200 தடுப்பூசி போடப்படுகிறது. அதுமட்டுமின்றி கோவாக்சின் தடுப்பூசி இரண்டாம் தவணை செலுத்தி கொள்பவர்களுக்கு மட்டுமே செலுத்தப்படும் என்றும் மாநகராட்சி கூறியுள்ளது.