சென்னை யானைகவுனியில் கடந்த 10ஆம் தேதி தலில்சந்த், புஷ்பா பாய், ஷீத்தல் ஆகியோர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதனடிப்படையில் விசாரணையை தொடங்கிய யானைகவுனி போலீசார், தனிப்படை அமைத்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.
விசாரணையில், குடும்ப பிரச்னை காரணமாக ஷீத்தலின் மனைவி ஜெயமாலாவின் சகோதரர்களான கைலாஷ், விகாஷ் உட்பட 6 பேர் காரில் வந்து துப்பாக்கியால் சுட்டது தெரியவந்தது. கார் எண்ணை வைத்து புனேவில் பதுங்கியிருந்த கைலாஷ், விஜய் உத்தம், ரவீந்திரநாத் கர் ஆகியோரை கைது செய்தனர். இவர்களிடம் நடத்திய விசாரணையில் கொலை செய்ய பயன்படுத்தியது கள்ளத்துப்பாக்கி என தெரியவந்தது. பின்னர் இவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
மேலும், இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள ஜெயமாலா, மற்றொரு சகோதரர் விகாஷ், ராஜீவ் ஷிண்டே ஆகியோரை தனிப்படையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த நிலையில், யானைகவுனி போலீசார் கைது செய்த மூவரையும் 10 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளிக்கக் கோரி ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டது.