சென்னை: தமிழகத்தின் சென்னை, கோவை, திருச்சி, மதுரை மாவட்டங்களில் 6வது கேலோ இந்தியா இளைஞா் விளையாட்டுப் போட்டிகள் ஜன.19 முதல் தொடங்கி ஜன.31 வரை நடைபெற உள்ளது. சென்னை ஜவஹா்லால் நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ள இந்த போட்டியின் தொடக்க விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு போட்டியினை தொடங்கி வைக்க உள்ளார்.
இதற்காக பிரதமர் மோடி, தமிழகத்திற்கு 3 நாட்கள் பயணமாக நாளை (ஜன. 19) வருகிறார். பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு சென்னையில் 5 அடுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. ஏறத்தாழ 22 ஆயிரம் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
மேலும், சென்னையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளதால் பொதுமக்கள் மாற்றுபாதைகளில் செல்ல போக்குவரத்து காவல்துறை அறிவுறுத்தி உள்ளது. இது தொடர்பாக சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையினர் வெளியிட்ட செய்தி குறிப்பில், "நேரு விளையாட்டு அரங்கில் கேலோ இந்தியா யூத் கேம்ஸ் 2023 விளையாட்டு போட்டியை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைப்பதற்காக நாளை சென்னை வருகிறார்.
இந்நிலையில் பிரதமரின் வருகையையொட்டி சென்னை பெருநகர காவல் துறை சார்பில் 22,000 காவல்துறையினர் மற்றும் ஐந்து அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. மேலும் சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை சார்பாக பொதுமக்களுக்கு பல்வேறு அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டுள்ளன.