சென்னையில் நேற்றிரவிலிருந்து பெய்து வரும் தொடர் மழை காரணமாக பல்வேறு இடங்களில் வெள்ளம் போல் நீர் சூழ்ந்துள்ளது.
இதனால், பலரும் வேலைக்குச் செல்ல முடியாமல் மிகவும் தவித்துவருகின்றனர். பிரதான சாலைகளிலும் முக்கிய சுரங்கப் பாதையிலும் நீர் சூழ்ந்துள்ளதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதனையடுத்து மாநகராட்சி அலுவலர்கள், காவல் துறை அலுவலர்கள் போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
இதில் சென்னை ராயப்பேட்டை ஜிபி சாலையானது, முற்றிலுமாக பாதிக்கப்பட்டது. சாலையில் உள்ள நீரை அப்புறப்படுத்தி, எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து போக்குவரத்து கூடுதல் ஆணையர் கண்ணன் ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த போக்குவரத்து கூடுதல் ஆணையர் கண்ணன், “சென்னையில் மூவாயிரம் காவல் துறையினர் ,ஆயுதப்படையினர் இணைந்து, போக்குவரத்தை சீர் செய்து மழைநீரை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னையில் 120 இடங்கள் தண்ணீர் தேங்கும் இடம் என அடையாளம் காணப்பட்டுள்ளது. அங்கு தண்ணீர் தேங்கி இருந்தால், மாநகராட்சி அலுவலர்கள் உதவியுடன் மழை நீரை அகற்றி போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் காவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையர் கண்ணன் செய்தியாளர் சந்திப்பு தொடர்ந்து மழை பெய்யும் என வானிலை எச்சரிக்கை விடப்பட்டிருக்கிற, காரணத்தினால் பொதுமக்கள் சாலை ஓரங்களில் வாகனங்களை தேவையில்லாமல் நிறுத்த வேண்டாம். அதுமட்டுமின்றி, வாகனங்களை வேகமாக ஓட்டிச் செல்ல வேண்டாம்” என்றார்.
மேலும், சென்னையில் பூந்தமல்லி நெடுஞ்சாலை அதிகளவு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதால், இணைப்பு சாலைகளில் வாகனங்களை திருப்பி போக்குவரத்து சரி செய்யப்பட்டுள்ளதாகவும், வேப்பேரி, சென்ட்ரல் ,பெரியமேடு பகுதிகளில் செல்லும் சாலையில் நீர் அதிகளவு சூழ்ந்துள்ளதால் போக்குவரத்து தடை செய்யப்பட்டு அப்பகுதி வழியாக செல்லும் வாகனங்கள், வேறு சாலை வழியாக திருப்பி விடப்பட்டதாகவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க...வட சென்னையில் 7 மணி நேரமாக கன மழை: பொதுமக்கள் அவதி!