சென்னை கீழ்ப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த பவித்திரன்(30) என்பவர், வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த 27ஆம் தேதி அன்று இரவு வேலையை முடித்து விட்டு சைக்கிளில் பச்சையப்பன் கல்லூரி அருகே வந்தபோது, இருசக்கர வாகனத்தில் வந்த கொள்ளையர்கள் பவித்திரனை வழி மறித்து கத்தியை காட்டி மிரட்டி ரூ. 7 ஆயிரம், செல்போனை பறித்துச் சென்றனர்.
இது தொடர்பாக கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் பவித்திரன் புகார் கொடுத்தார். வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர், சம்பவ இடத்துக்கு சென்று அங்கு பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில் பதிவான காட்சிகளில் பழைய குற்றவாளிகள் இந்த குற்றச்செயலில் ஈடுபட்டது தெரியவந்தது.
இந்த காட்சிகளை வைத்து குற்றவாளிகளை தேடி வரும் போது, இன்று (ஆக.30) பெரும்பாக்கம் பகுதியில் பதுங்கி இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் கீழ்ப்பாக்கம் காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று இருவரை மடக்கி பிடித்தனர்.
கைது செய்த இருவரையும் கீழ்ப்பாக்கம் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்ததில், சோழிங்கநல்லூர் பகுதியை சேர்ந்தவர் ரவுடி ஆதிபகவன்(எ) தாஸ்(23), இவருடைய கூட்டாளி முக்கேஷ்(19) என்பது தெரிய வந்தது. மேலும் விசாரணையில் ரவுடி ஆதிபகவன் மீது 2015இல் கொலை வழக்கு நிலுவையில் உள்ளது. மேலும், இவர்களிடம் இருந்து செல்போன், ஒரு பட்டாகத்தி, இருசக்கர வாகனம் ஆகியவை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க...ஏமாற்றிய உதவி ஆய்வாளர்: சட்டப்போராட்டம் நடத்தி வழக்கு பதியவைத்த பெண்!