சென்னை: நிவர் புயல் கரையை கடந்து மூன்று நாட்களுக்கு மேல் ஆகியுள்ள நிலையில் , சென்னை செம்மஞ்சேரி பகுதியில் மழை நீர் வற்றாததால் அப்பகுதி மக்கள் கடும் இன்னல்களை சந்தித்து வருகின்றனர். தீவிரமான நிவர் புயல் நவம்பர் 26ஆம் தேதி அதிகாலை கரையைக் கடந்தது. புயலினால் கடலூர், புதுச்சேரி, காரைக்கால் சென்னை உள்ளிட்ட பகுதிகளில் காணப்பட்டது. சென்னையில் பெரிய அளவு பாதிப்புகள், உயிர்சேதம் இல்லையென்றாலும் பல்வேறு பகுதிகள் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ளன.
வேளச்சேரி, கே.கே. நகர், முடிச்சூர், செம்மஞ்சேரி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வீடுகளில் மழைநீர் புகுந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக செம்மஞ்சேரி பகுதியில் தேங்கிய மழை நீர் இன்றுவரை வடியவில்லை. மாநகராட்சி, பேரிடர் மேலாண்மை சார்பாக நீர் அகற்றப்பட்டு வந்தாலும், அப்பகுதி தாழ்வான பகுதி என்பதால் சில சிரமங்கள் ஏற்பட்டுள்ளன.
இந்தப் புயல் என்று இல்லை, மழை வந்தாலே இங்கு தண்ணீர் தேங்குவது எப்போதும் நடக்கும் ஒன்றுதான். எங்களுக்கு உணவு மட்டும் வழங்கினால் போதாது. தண்ணீர் தேங்காமல் இருக்க நிரந்தர தீர்வு ஏற்படுத்தித்தரவேண்டும் என்கின்றனர் அப்பகுதி மக்கள். தண்ணீர் அதிகப்படியாக அப்பகுதியில் தேங்கியுள்ளதால், நான்கு நாள்களாக அம்மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியிருக்கின்றனர். குடிக்கும் தண்ணீருடன் சாக்கடை நீர் கலப்பதால் குழந்தைகளுக்கு உடல்நல பாதிப்புகள் ஏற்படுவதாக வேதனையடைகின்றனர்.