தமிழ்நாட்டின் கடற்கரையை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக இன்று (ஆகஸ்ட் 24) நான்கு மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சேலம், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன்கூடிய கனமழையும், ஏனைய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன்கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
அதேபோல் நாளை (ஆகஸ்ட் 25) திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன்கூடிய கன மழையும், ஏனைய கடலோர மாவட்டங்கள், உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன்கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
நாளை மறுநாள் (ஆகஸ்ட் 26) திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன்கூடிய கனமழையும், ஏனைய கடலோர மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.