சென்னை:தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டம் மார்ச் 2021-ல், ஆட்டோ மொபைல் சரக்கு போக்குவரத்தில் தனது முந்தைய சாதனையை விஞ்சியுள்ளதாக சென்னை ரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது.
2021 மார்ச் மாதத்தில் சென்னை ரயில்வே கோட்டம் 74 சரக்கு ரயில்களை ஆட்டோ மொபைல் ஏற்றுமதிக்கான இயக்கியுள்ளது. இதில் 21 ரயில்கள் வாலாஜாபாத் சரக்கு பணிமனையிலிருந்தும், 53 ரயில்கள் மேல்பாக்கம் சரக்கு பணிமனையிலிருந்தும் இயக்கப்பட்டன. இந்த ஆட்டோ மொபைல் சரக்கு போக்குவரத்து மூலம் ஈட்டப்பட்ட வருவாய் ரூ .17.77 கோடி ஆகும். மொத்தம் 1,923 வேன்களில் ஆட்டோ மொபைல் சரக்குகள் ஏற்றப்பட்டன.
2020-2021 நிதியாண்டில் ஒரே மாதத்தில் கையாளப்பட்ட ஆட்டோ மொபைல் போக்குவரத்துக்கான சரக்கு ரயில்கள் மற்றும் ஈட்டப்பட்ட வருவாய் ஆகியனவற்றுள் இதுவே மிக அதிகமானதாகும். இதுவரை பிப்ரவரி 2021ல் கையாளப்பட்ட 64 சரக்கு ரயில்களே இந்த 2020-2021 நிதியாண்டில் ஒரு மாதத்தில் இயக்கப்பட்ட சரக்கு ரயில்களுக்கான அதிகபட்ச எண்ணிக்கையாக கருதப்பட்டது. இந்தச் சாதனையை சென்னை ரயில்வே கோட்டம் 2021 மார்ச் மாதத்தில் முறியடித்துள்ளது.