சென்னை:சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் அமலாக்கத்துறையால் 2023, ஜூன் 14-ல் கைதான அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக ஆகஸ்ட் 12 ஆம் தேதி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் 3 ஆயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கை மற்றும் ஆவணங்களை அமலாக்கத்துறையினர் தாக்கல் செய்தனர்.
அவரது ஜாமீன் மனு முதன்மை அமர்வு நீதிமன்றம், உயர்நீதிமன்றம் ஆகியவற்றால் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை விசாரித்த நீதிமன்றம், மருத்துவ காரணங்களின் அடிப்படையில் ஜாமீன் வழங்க முடியாது என தெரிவித்தது. இதை அடுத்து, அந்த மனு வாபஸ் பெறப்பட்டது. ஜாமீன் கோரி மீண்டும் அமர்வு நீதிமன்றத்தை நாடலாம் என அறிவுறுத்தி இருந்தது.
இந்த நிலையில், அவரது நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைந்த நிலையில், புழல் சிறையில் இருந்து காணொளி காட்சி மூலமாக சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பாக இன்று (டிச.15) ஆஜர்படுத்தபட்டார். இதனையடுத்து, செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை 2024 ஆம் ஆண்டு ஜனவரி 4ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார். இதன் மூலம் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 13ஆவது முறையாக நீட்டிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.