சென்னை: தமிழ்நாட்டில் கடந்த 2010ஆம் ஆண்டு திமுக ஆட்சியின்போது, 1,815 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சென்னை துறைமுகம்-மதுரவாயல் பறக்கும் சாலைத் திட்டம் தொடங்கப்பட்டது. துறைமுகத்திற்கு கனரக வாகனங்கள் அதிகளவில் வருவதால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் நோக்கில் இத்திட்டம் தொடங்கப்பட்டது. இதற்கு அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் அடிக்கல் நாட்டினார்.
இத்திட்டத்திற்கான பணிகள் நடந்து வந்த நிலையில், 2011ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிக்கு வந்தபோது, சுற்றுச்சூழலை பாதிக்கும் வகையில் கூவம் ஆற்றின் ஓரத்தில் தூண்கள் கட்டப்பட்டதாகக்கூறி இத்திட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டது. பிறகு 2017ஆம் ஆண்டு இத்திட்டத்திற்கு மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை மற்றும் தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியது. எனினும் பல்வேறு காரணங்களால் பணிகள் கிடப்பில் போடப்பட்டன.
பிறகு இத்திட்டம் இரண்டடுக்கு பறக்கும் சாலைத்திட்டமாக மாற்றியமைக்கப்பட்டு, திட்டமதிப்பும் 5,800 கோடியாக உயர்த்தப்பட்டது. ஆனால், இத்திட்டத்திற்கான பணிகள் இதுவரை தொடங்கப்படவில்லை. திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ள நிலையில், கிடப்பில் போடப்பட்டுள்ள இந்த பறக்கும் சாலை திட்டப் பணிகளை விரைந்து தொடங்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இது குறித்து நகர்ப்புற பொறியாளர் மற்றும் அண்ணா பல்கலைக்கழக ஓய்வு பெற்ற பேராசிரியர் கே.பி.சுப்பிரமணியன் கூறுகையில், "துறைமுகத்தில் இருந்து மதுரவாயல் வரையிலான பறக்கும் சாலை திட்டம், போக்குவரத்து நெரிசலை குறைக்கும் என்பது உண்மை. ஆனால், அதே அளவுக்கு காற்று மாசுபாடும் இருக்கும். சரக்கு வாகனங்களின் போக்குவரத்துக்கும், சுற்றுச்சூழலை மாசுபடுத்தாமலும் இருக்க, ரயில் இணைப்பு என்பது நிலையான தீர்வாக இருந்திருக்கும். இந்த உயர்மட்ட சாலையில் ஏறுதல் மற்றும் இறங்குதல் காரணமாக வாகனங்கள் அதிக எரிபொருளை செலவழிக்க நேரிடும். இது ஒரு செலவு மிகுந்த திட்டமாகும்" என்றார்.