சென்னை: தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை பொது மக்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். சென்னையை பொறுத்த வரையில் பொதுமக்கள் அதிகாலையிலேயே எழுந்து, வீட்டின் முன்பு வண்ண கோலமிட்டு புதுப்பானையில் புத்தரிசியிட்டு பொங்கல் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர். தங்கள் இல்லங்களில் அதிகாலையில் பொங்கல் வைத்து சூரியனுக்கு நன்றி தெரிவித்தனர்.
சென்னையில் பல்வேறு கட்சிகளை சேர்ந்த அரசியல் தலைவர்கள் பொங்கல் பண்டிகையை விமரிசையாக கொண்டாடினர். பொது மக்களுடன் இணைந்து பொங்கல் வைத்தும், புத்தாடை உள்ளிட்ட பொருட்களை வழங்கியும் சிறப்பாக கொண்டாடினர்.
கனிமொழி:சென்னை சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் விடுதியில், சென்னை சங்கமம் கலைஞர்களுடன் இணைந்து திமுக துணைப் பொதுச்செயலாளர் எம்.பி கனிமொழி பொங்கல் கொண்டாடினார். சுமார் 40 வகையான பாராம்பரிய இசைக் கலைஞர்கள், வாத்தியங்கள் இசைக்க கனிமொழி எம்.பி. உற்சாகமாக பொங்கல் வைத்து கொண்டாடினார். கலைஞர்களுக்கு புத்தாடைகளை கனிமொழி வழங்கினார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய எம்.பி.கனிமொழி, "தமிழகம், தமிழ்நாடு என இரண்டுமே சொல்லிக் கொண்டு தான் இருந்தோம். பல்வேறு போராட்டத்திற்கு பிறகு தான் தமிழ்நாடு என்ற பெயரை அண்ணா வைத்தார். தமிழ்நாடு என சொல்லக்கூடாது எனும் உரிமை யாருக்கும் இல்லை என்றார்.தமிழர்கள் தங்களின் உணர்வை பிரதிபலிக்கும் விதமாக வீடுகளில் தமிழ்நாடு வாழ்க என கோலமும், சமூக வலைத்தளத்தில் பதிவிட்டும் வருகின்றனர். தமிழர்களை சீண்டிப் பார்த்தால் உள்ளே உள்ள தமிழ் உணர்வும் சுயமரியாதையும் வீர்கொண்டு எழும்" என கனிமொழி கூறினார்.
தே.மு.தி.க. பொங்கல்: சென்னை சாலிகிராமத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த், அவரது இல்லத்தில் குடும்பத்துடன் தைப் பொங்கலை கொண்டாடினார். பச்சை சட்டை வேட்டி அணிந்திருந்த விஜயகாந்த் சேரில் அமர்ந்திருக்க பிரேமலதா விஜயகாந்த் பொங்கலை வைத்து சூரிய பகவானிடம் காண்பித்து பொங்கலோ பொங்கல், தமிழ் பொங்கல், தேமுதிக பொங்கல் என பொங்கலை வரவேற்றார்.
அதனைத் தொடர்ந்து அவர்கள் வளர்த்து வரும் வாசுகி என்ற பசுவிற்கு படையல் இட்டு வழிபட்டனர். இந்த நிகழ்ச்சியில் அவரது மூத்த மகன் விஜய பிரபாகரன் மற்றும் இளைய மகன் சண்முக பிரியன் ஆகியோர் விஜயகாந்த்துடன் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா விஜயகாந்த், "அனைத்து மக்களுக்கும் பொங்கல் வாழ்த்துக்கள். கடந்த 2 வருடங்களாக கரோனாவால் பொங்கல் பண்டிகையை மக்கள் கொண்டாடவில்லை. அனைவரும் இந்த பொங்கலை சிறப்பாக கொண்டாடி வரும் வேளையில், தை பிறந்தால் வழி பிறக்கும் என்று சொல்வார்கள் அனைவருக்கும் எல்லா எதிர்காலமும் பெற வேண்டும் எனவும் அனைவரும் நல்லா இருக்க வேண்டும் தேமுதிகவின் உடைய தொண்டர்கள் இயன்றதை செய்வோம் இல்லாதவர்களுக்கு என்று தமிழக முழுவதும் தொண்டர்களுக்கு தொண்டு செய்து வருகின்றனர் எனக் கூறினார்.