சென்னை அசோக் நகர் பகுதியில் கடந்த ஐந்தாம் தேதி வாகன ஓட்டி ஒருவரிடம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் நாகராஜன் என்பவர் ஐந்தாயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டு மிரட்டிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதனையடுத்து அசோக் நகர் போக்குவரத்து காவல் ஆய்வாளர் நாகராஜன் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டார்.
இந்நிலையில் லஞ்சம் மற்றும் பணம் கையாடல் செய்வது போன்ற முறைகேடுகளில் ஈடுபடும் போக்குவரத்து போலீசார் மீது துறை ரீதியிலான மற்றும் குற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என சென்னை காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னையில் கடந்த 26ஆம் தேதி முதல் புதிய மோட்டார் வாகன திருத்த சட்டத்தின் படி விதிமீறலில் ஈடுபடும் வாகன ஓட்டிகளிடம் போக்குவரத்து போலீசார் அபராத தொகையை பெற்று வருகின்றனர்.
போக்குவரத்து விதி மீறலில் ஈடுபடும் வாகன ஓட்டிகள் மீது வழக்கு பதிவு செய்வதற்கு போக்குவரத்து காவல் துறையில் பணிபுரியும் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர்கள் ஆகியோருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகவும், இ சலான் கருவிகளை பயன்படுத்துவது குறித்து 150 காவலர்களுக்கு பயிற்சி மற்றும் விழிப்புணர்வு நடத்தப்பட்டதாகவும் சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.