சென்னை: அண்மையில் பஞ்சாப் மாநிலத்தில் நடைபெறவிருந்த மாநாட்டில் உரையாற்றுவதற்காக பிரதமர் மோடி சென்றிருந்தார். அப்போது மோடியின் பாதுகாப்பு வாகனங்கள் மேம்பாலத்திலேயே 20 நிமிடங்கள் வரையிலும் தடுத்து நிறுத்தப்பட்டது நாடு முழுவதும் பெரும் விவாதத்தை கிளப்பியது.
இதனையடுத்து மோடியின் பாதுகாப்பில் ஏற்பட்ட பாதுகாப்பு குளறுபடி குறித்து, பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டிருந்தார். அப்போது அதனை ரீட்வீட் செய்த நடிகர் சித்தார்த், வீராங்கனை சாய்னா நேவால் குறித்து ஆபாச தொனியில் கருத்தொன்றை வெளியிட்டார். சித்தார்த்தின் பதிவுக்கு நாடு முழுவதுமிருந்து கண்டனங்கள் எழத் தொடங்கின.
இதனையடுத்து சித்தார்த் மீது உடனடி நடவடிக்கை எடுக்கக்கோரி, தமிழ்நாடு காவல்துறை தலைவருக்கு தேசிய மகளிர் ஆணைய தலைவர் ரேகா சர்மா கடிதம் அனுப்பியிருந்தார். அதில், “நடிகர் சித்தார்த் மீது இந்திய குற்றவியல் சட்டப் பிரிவு 354 ஏ (பாலியல் துன்புறுத்தல்), ஐடி சட்டத்தின் பிரிவு 67 (ஆபாசமான விஷயங்களை வெளியிடுதல்) ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் கேட்டுக் கொள்ளப்பட்டது.