தமிழ்நாட்டில் கரோனா பரவல் அச்சுறுத்தல் காரணமாக அதனைக் கட்டுப்படுத்த மாநில, மத்திய அரசுகள் இணைந்து பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
குறிப்பாக, இந்த நோயைக் கட்டுப்படுத்த தமிழ்நாடு முழுவதும் மாநகராட்சி அலுவலர்கள் தினமும் கிருமி நாசினி தெளித்துச் சுத்தப்படுத்தி வருகின்றனர். தினந்தோறும் மாநகராட்சி பணியாளர்கள் பொதுமக்களின் வீட்டிற்கே சென்று அவர்களிடம் சளி, காய்ச்சல் போன்ற கரோனா அறிகுறிகள் உள்ளதா என விசாரித்து வருகின்றனர்.
இதுமட்டுமில்லாமல், தமிழ்நாடு காவல்துறையினர், பொதுமக்கள் சமூக இடைவெளியைப் பின்பற்றுவதைக் கண்காணிக்கவும், முகக் கவசம் அணியாமல் இருந்தால் நூதன முறையில் தண்டனை வழங்கியும் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.
குறிப்பாக, சென்னையில் நாளுக்கு நாள் கரோனா நோய் பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருப்பதால் சென்னை காவல்துறையினர், பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இணையதளம் ஒன்றை உருவாக்கியுள்ளனர்.
https://alerts.chennaipolicecitizenservices.com/home/ என்ற இணையதளம் மூலமாகப் பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய நான்கு வழிமுறைகளைக் குறிப்பிட்டுள்ளனர். அதாவது, சென்னையில் உள்ள பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகள் தவிர வெளியே செல்லக் கூடாது எனவும், தெரியாத நபருடன் உரையாடுவதைத் தவிர்க்க வேண்டும் எனவும், ஆறு அடி சமூக இடைவெளியுடன் உரையாட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து பயனாளர்களின் தொலைபேசி எண், அஞ்சல் குறியீட்டைப் பதிவிட்டால் ஊரடங்கு எத்தனை நாள்கள் வரை அமலில் உள்ளது என்பதையும், ஊரடங்கு நாள்களில் அனுமதி அளிக்கப்பட்டவை, மறுக்கப்பட்டவை குறித்து தெளிவாக விளக்கமளித்துக் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், பொதுமக்கள் உடனடியாக அறிந்து கொள்ளும் வகையில் அருகிலுள்ள காவல் நிலையம், சுகாதார வசதி, அம்மா உணவகம் ஆகியவற்றைக் காண்பிக்கும் படியும் உருவாக்கியுள்ளனர். இதன்மூலம் பொதுமக்கள் எளிதாக தங்களது தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் சென்னை காவல்துறையினர் ஏற்பாடு செய்துள்ளனர் இதையும் படிங்க : ஏழை தொழிலாளர்களை சுரண்டும் பாஜக அரசு - ஸ்டாலின் காட்டம்