சென்னை: கிரிப்டோ கரன்சி மற்றும் அது தொடர்பான முதலீடுகள் பெரிதளவில் தமிழகத்தில் வளர்ச்சி அடையவில்லை. ஆனால் கிரிப்டோ கரன்சி தொடர்பாக தினமும் பல்வேறு நிறுவனங்கள் உருவாகி வருகின்றன. கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்தால் அதிக லாபம் பார்க்கலாம் என்ற எண்ணம் மக்கள் மத்தியில் பரவலாக இருக்கிற காரணத்தினால் போலியாக துவங்கப்படும் பல்வேறு கிரிப்டோ எக்ஸ்சேஞ்சுகள் மீது பொதுமக்கள் சந்தேகத்துடன் அணுகுவதில்லை. இதனால், போலி கிரிப்டோ எக்ஸ்சேஞ்சுகளில் சிக்கி பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.
இதுபோன்ற போலி கிரிப்டோ எக்ஸ்சேஞ்சுகள் மற்றும் நிறுவனங்களிடமிருந்து எச்சரிக்கையாக இருக்கப் பல்வேறு அறிவுரைகளை சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது. இதுபோன்ற போலி கிரிப்டோ எக்ஸ்சேஞ்சுகள் மற்றும் நிறுவனங்கள் தொடர்பாக ஆன்லைனில் கருத்துகள் பார்க்கும்பொழுது போலியாகவே பலரும் சிறந்த நிறுவனம் என கருத்துகளைப் பதிவிடுகின்றனர்.
ஜான் ராகுல் என்ற பெயர்களில் இவர்கள் கூறும் போலி கருத்துகளை, போலி சமூக வலைதள கணக்குகள் மூலமாக பதிவு செய்யப்படுவதாகவும், இதனை நம்ப வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளனர். மேலும், இது போன்ற நிறுவனங்கள் மிகப்பெரிய அளவிலான சலுகைகளை கொடுப்பதாகக் கூறி ஆசை வார்த்தை காட்டுவார்கள் எனவும்; அதனை நம்பி மோசடியில் ஏமாற வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளனர்.
மேலும், இது போன்ற போலி கிரிப்டோ நிறுவனங்கள் டெலிகிராம், ஃபேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் ஆகியவற்றில் குழுக்களை உருவாக்கி, அதில் பல்வேறு போலி உறுப்பினர்களைச் சேர்த்து நம்ப வைக்கும்படி பல்வேறு கருத்துகளை குழுவில் பதிவிடச் செய்வார்கள் எனவும்; இது போன்ற குழுக்களில் சேரக்கூடாது எனவும் எச்சரிக்கின்றனர்.