சென்னை: இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி உள்ளிட்டோர் நடித்துள்ள திரைப்படம் விடுதலை. படத்தின் முதல் பாகம் கடந்த 31ஆம் தேதி தியேட்டரில் வெளியானது. தருமபுரி மாவட்டம் வாச்சாத்தி மலை கிராம வன்முறை சம்பவத்தை மையமாக வைத்து வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
விடுதலை படத்தில் அதீத வன்முறைக் காட்சிகள் இருப்பதால் அதற்கு திரைப்பட தணிக்கை குழு ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. இதனால் 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் இப்படத்தைப் பார்க்க கூடாது என்ற விதி உள்ளது. இந்நிலையில் சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள தனியார் திரையரங்கில் படம் ஓடிக்கொண்டிருந்தபோது பெற்றோருடன் படம் பார்த்துக் கொண்டிருந்த குழந்தைகளை வெளியேறுமாறு அங்கு வந்த போலீசார் தெரிவித்துள்ளனர்.
ஆனால் இதற்கு மறுப்பு தெரிவித்து அங்கிருந்த பொது நல மாணவர் எழுச்சி இயக்கத்தின் நிறுவனர் வளர்மதி "மக்களின் வலியைப் பேசும் விடுதலை படத்தை குழந்தைகள் குடும்பத்துடன் பார்க்க கூடாதா? சாதி தீண்டாமை திரையரங்குகளிலும் உள்ளது" என்று வாக்குவாதம் செய்ததால் போலீசார் செய்வதறியாது திகைத்து நின்றனர்.