சென்னை: புத்தாண்டு கொண்டாட்டத்தில் பின்பற்ற வேண்டியவை குறித்து, சென்னை காவல் துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளது. அதில், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் உத்தரவின் பேரில், பொதுமக்கள் அமைதியாகவும் பாதுகாப்பாகவும் புத்தாண்டைக் கொண்டாடுவதற்கு 18,000 காவல் அதிகாரிகள் மூலம் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
முக்கியமாக, புத்தாண்டு கொண்டாட்டத்தின் பொருட்டு கடற்கரை, வழிபாட்டுத் தலங்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. சென்னை பெருநகர காவல் கூடுதல் ஆணையாளர்கள் அறிவுரையின் பேரில், இணை ஆணையாளர்கள் ஆலோசனையின் பேரில், துணை ஆணையாளர்கள் மேற்பார்வையில், உதவி ஆணையாளர்கள் தலைமையில், காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் மற்றும் ஆயுதப்படை, தமிழ்நாடு சிறப்புக் காவல் படை (TSP) காவல் ஆளிநர்கள் என மொத்தம் 18,000 காவல் துறையினர் மூலம், புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது பாதுகாப்பு அளிக்க சென்னை பெருநகர காவல் துறை விரிவான பாதுகாப்பு ஏற்பாடு செய்துள்ளது.
காவல் துறையினருக்கு உதவியாக, சுமார் 1,500 ஊர்க்காவல் படையினரும், புத்தாண்டு பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். தியாகராயநகர், அடையாறு, புனித தோமையர்மலை, பூக்கடை, வண்ணாரப்பேட்டை, புளியந்தோப்பு, அண்ணா நகர், கொளத்தூர் மற்றும் கோயம்பேடு ஆகிய இடங்களில் மொத்தம் 420 இடங்களில் வாகனத் தணிக்கை குழுக்களும், கடற்கரை ஒட்டிய பகுதிகளில் தமிழ்நாடு காவல்துறை, கடலோர பாதுகாப்பு குழுமம், மெரினா கடற்கரை உயிர்காக்கும் பிரிவினருடன் இணைந்து தகுந்த பாதுகாப்பு நடவடிக்கையும், எச்சரிக்கைப் பதாகைகளும் பொருத்தப்பட்டு, கடலில் மூழ்கி உயிரிழப்பைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், 25 சாலை பாதுகாப்புக் குழுக்கள் இருசக்கர வாகனத்தில் ரோந்து சென்று, பொதுமக்களுக்கு பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி, வேண்டிய உதவிகளை மேற்கொள்வார்கள். தரமணி, நீலாங்கரை, துரைப்பாக்கம், மதுரவாயல், பைபாஸ் சாலை, மற்றும் GST ரோடு போன்ற பகுதிகளில் இருசக்கர வாகன பந்தயம் (Bike Race) தடுப்பு நடவடிக்கையாக, 25 கண்காணிப்பு சோதனை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.