சென்னை:போக்குவரத்து சிக்னல்களில் ஒலிக்கப்பட்ட பாடல்கள் மற்றும் விழிப்புணர்வு குறுந்தகவல்களை நிறுத்தி சென்னை காவல் ஆணையர் சந்திப் ராய் ரத்தோர் நடவடிக்கை எடுத்துள்ளார். குறிப்பாக, இசை சிக்னல் மூலம் வாகன ஓட்டிகளுக்கு கவனச் சிதறல் ஏற்பட்டு விபத்து ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும், ஒலி மாசு ஏற்படுவதன் காரணமாக ஒலிக்கப்படும் பாடல்களை இனி ஒலிபரப்ப வேண்டாம் எனவும் போக்குவரத்து போலீசாருக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், மறு உத்தரவு வரும் வரை போக்குவரத்து சிக்னல்களில் ஒலிக்கும் பாடல்களை பயன்படுத்தக்கூடாது எனவும் தனது உத்தரவில் தெரிவித்து உள்ளார். சென்னையில் போக்குவரத்து பாதுகாப்பு தொடர்பாக பல்வேறு முறைகளில் போக்குவரத்து போலீசார் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.
அந்த வகையில் கடந்த வருடம் ஏப்ரல் மாதம் தனியார் எஃப்.எம் மற்றும் தனியார் தொலைக்காட்சி இசைக் குழுவினருடன் இணைந்து 105 போக்குவரத்து சிக்னல்களில் இசைப் பாடல்கள் மற்றும் விழிப்புணர்வு செய்திகள் அடங்கிய இசை சிக்னல் சென்னை காவல் துறையால் அறிமுகப்படுத்தப்பட்டு இருந்தது.
இந்த நிலையில், ஏற்கனவே பணியில் உள்ள காவலர்கள் செல்போனை பயன்படுத்தக்கூடாது என உத்தரவிட்ட சென்னை காவல் ஆணையர், தற்போது இந்த உத்தரவையும் பிறப்பித்து நடவடிக்கை மேற்கொண்டு உள்ளார்.
இதையும் படிங்க:"கோயில் சொத்தை தொட்டால் குடி அழியும்" அமைச்சர் சேகர்பாபுவுக்கு ஹெச்.ராஜா வார்னிங்!
இரவில் பயன்பாட்டிற்கு வரும் மேம்பாலங்கள்:அதுமட்டுமல்லாமல் சென்னை போக்குவரத்துத் துறையினரால் போக்குவரத்தை கட்டுப்படுத்தும் வகையிலும், விபத்தை தடுக்கும் வகையிலும் பல விழிப்புணர்வு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதில், இளைஞர்களின் இருசக்கர வாகன சாகசங்களை தடுக்க மூடப்பட்டிருந்த மேம்பாலங்கள் மீண்டும் திறக்கப்படுவதாக சென்னை போக்குவரத்து காவல் துறை தெரிவித்துள்ளது.
சென்னையில் கரோனா காலக்கட்டத்தில் ஊரடங்கின்போது மேம்பாலத்தில் இரவு நேரங்களில் இளைஞர்கள் சிலர் இருசக்கர வாகன சாகசங்களில் ஈடுபட்டு வந்தனர். இதனால் வாகன விபத்தில் சிக்கி சிலர் உயிரிழக்கும் சம்பவங்களும் அரங்கேறின. இதை தடுப்பதற்காக இரவு நேரங்களில் சென்னையில் உள்ள முக்கியமான 33 மேம்பாலங்களை மூட போக்குவரத்து போலீசாருக்கு அப்போதைய காவல் ஆணையர் உத்தரவிட்டார்.
இந்த நிலையில், தற்போது சென்னையில் மூடப்பட்டுள்ள 33 மேம்பாலங்களை இரவு நேரங்களில் திறக்குமாறு போக்குவரத்து போலீசாருக்கு காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவிட்டுள்ளார். குறிப்பாக, பல்வேறு அலுவலக நேரங்கள் காரணமாக இரவு நேரங்களில் வாகன போக்குவரத்து அதிகரித்து வருவதால், சாலைகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க இரவு நேரங்களிலும் மேம்பாலங்களை திறக்க சென்னை காவல் துறை முடிவு செய்துள்ளது.
இரவு நேரங்களில் போக்குவரத்து நிலைமையை மேம்படுத்துவது குறித்து ஆய்வு செய்வதற்காக தற்காலிக நடவடிக்கையாக இது மேற்கொள்ளப்படுவதாக சென்னை காவல் துறை தெரிவித்துள்ளது. மேலும், மேம்பாலங்களில் அதிவேகமாக வாகனம் ஓட்டாமல் இருக்க போதிய போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் சென்னை காவல் துறை தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க:கோவை கட்டட விபத்து: இருவர் கைது - நிவாரணம் வழங்க ஏற்பாடு