சென்னை:ஜெர்மன் நாட்டை சேர்ந்த பிரைடுரிச் வின்சென்ட்(23) என்ற இளைஞர் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்காக, இலங்கை வழியாக சென்னை விமான நிலையத்திற்கு கடந்த 24ஆம் தேதி வந்துள்ளார். பின்னர், சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், தான் சென்ட்ரலில் இருந்து கால் டாக்சி மூலமாக வளசரவாக்கத்தில் உள்ள தங்கும் விடுதிக்கு சென்றதாகவும், சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து வந்த இருவர் கத்தியை காட்டி மிரட்டி கையில் வைத்திருந்த லேப்டாப் மற்றும் இரண்டு பைகளை பறித்து சென்றுவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
அந்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். இளைஞர் வந்த ராபிடோ ஆட்டோ ஓட்டுநரிடம் விசாரித்தபோது, ஜெர்மனி இளைஞர் திருவல்லிக்கேணியில் ஆட்டோவில் ஏறியபோது அவரிடம் லேப்டாப், பை உள்ளிட்ட எதுவும் இல்லை என்று தெரியவந்தது.
இதையடுத்து, போலீசார் திருவல்லிக்கேணி பகுதிக்கு சென்று விசாரணை நடத்தியதில், இளைஞர் திருவல்லிக்கேணியில் உள்ள லாட்ஜில் தங்கியிருந்ததும், லேப்டாப் மற்றும் இரண்டு பேக்குகளை அங்கேயே வைத்துவிட்டு, வேண்டுமென்றே காவல் நிலையத்தில் பொய் புகார் அளித்ததும் தெரியவந்தது. இது குறித்து இளைஞரிடம் கேட்டபோது, அவர் கூலாக ஜஸ்ட் ஃபன் (Just Fun) என்று கூறியுள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த போலீசார், ஜெர்மனி இளைஞர் வின்சென்ட்டை கடுமையாக எச்சரித்து அனுப்பினர்.