சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், மிக்ஜாம் புயலாக வலுப்பெற்று உள்ளது. தற்போது வடமேற்கு திசை நோக்கி புயல் வந்து கொண்டிருக்கிறது. இதனால் சென்னை உள்ளிட்ட வட கடலோர மாவட்டங்களில் அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், சென்னை பொதுமக்கள் தேவையின்றி யாரும் வெளியே வர வேண்டாம் என காவல்துறை எச்சரித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அனைத்து நுழைவு வாயில்களையும் காவல்துறையினர் பேரி கார்டுகளை கொண்டு மூடி கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளது. கடல் சீற்றம் அதிகம் காணப்படுவதால் பொதுமக்கள் மெரினா கடற்கரைக்கு வரத் தடை விதிக்கப்பட்டுள்ளது என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கடற்கரைக்கு வரும் பொதுமக்களை காவல்துறையினர் எச்சரித்துத் திரும்பி அனுப்பி வைத்து வருகின்றனர். தொடர்ந்து உழைப்பாளர் சிலை முதல் கலங்கரை விளக்கம் வரை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் காவல்துறை தரப்பில் சில அறிவுரைகளைப் பொதுமக்களுக்கு வழங்கி உள்ளனர்.