சென்னை:வடகிழக்குப் பருவமழை தொடங்கி அதிக மழைப்பொழிவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் அதிகப்படியான மழை, சூறாவளி போன்ற தவிர்க்க முடியாத சூழ்நிலை உருவாகும் எனத் தெரிவித்துள்ளது.
அதனை எதிர்கொள்வதற்காக வீடுகள் மற்றும் குடியிருப்புப்பகுதிகளில் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு சென்னை காவல் துறை சார்பில் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. அவையாவன பின்வருமாறு:
- மழைக்காலங்களில் வீட்டு மொட்டை மாடி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழைநீர் தேங்கக்கூடிய பொருட்களை அப்புறப்படுத்த வேண்டும்.
- குறிப்பாக சுற்றுப்புறங்களை தூய்மையாக வைப்பதன் மூலம் டெங்கு, மலேரியா போன்ற காய்ச்சல்கள் பரவாமல் இருப்பதைத் தடுக்கலாம்.
- அதேபோன்று மழைக்காலங்களில் மாசுபட்ட குடிநீர்களை பருகுவதன் மூலம் மஞ்சள் காமாலை, டைபாய்டு, காலரா மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்படுகிறது.
- ஆகவே, குடிநீரைக் காய்ச்சி வடிகட்டி பருகுவதன் மூலம் இது போன்ற கொடிய நோய்கள் பரவாமல் இருப்பதைத் தடுக்கலாம். இதனிடையே நிலவேம்பு மற்றும் கபசுர குடிநீர் ஆகியவற்றை சேர்த்துப் பயன்படுத்தலாம்.
- அதிகப்படியான மழை பெய்யும் நேரத்தில் வீட்டிற்குத்தேவையான அத்தியாவசியப் பொருட்களான எரிபொருட்கள், மருந்துப்பொருட்கள் மற்றும் உணவுப்பொருட்கள் ஆகியவற்றை முன்கூட்டியே தயார்படுத்தி வைத்துக்கொள்ளலாம்.
- வீட்டின் அருகே தேங்கி நிற்கின்ற மழைநீர் மற்றும் சாக்கடை கலந்த நீர் ஆகியவற்றில் குழந்தைகளை விளையாடாமல் பாதுகாத்துக்கொள்ளலாம்.
- குடியிருப்புப் பகுதியில் அருகில் இருக்கின்ற மின்கம்பங்கள், அருகே தேங்கி நிற்கின்ற மழை நீர் பகுதிக்கு செல்லாமல் இருக்க வேண்டும். அதேபோன்று வீட்டில் இருக்கின்ற சுவர்கள் மழை நீரால் ஊறி இருக்கும் நேரத்தில், அந்த இடத்தில் இருக்கின்ற ஸ்விட்ச் போர்டை பயன்படுத்தாமல் இருக்க வேண்டும்.
- காவல் ஆளிநர்கள் மழைக்காலங்களில் காவல் ஆளிநர்கள் பணிக்குச்செல்லும் பொழுது குடை, ரெயின் கோட் மற்றும் கம் பூட்ஸ் ஆகிவற்றை நிச்சயம் பயன்படுத்த வேண்டும்.