சென்னை: உயிரிழப்பு இல்லா புத்தாண்டு கொண்டாடுவதை நோக்கமாக வைத்து சென்னை காவல் துறை பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொண்டது. சென்னை முழுவதும் 365 வாகனச் சோதனை கூடாரங்கள் அமைத்து 16 ஆயிரம் போலீசார் களத்தில் இறங்கி தீவிர பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
பைக் ரேஸ் மற்றும் பைக் சாகசங்கள் ஆகியவற்றை கட்டுப்படுத்துவதற்காக இரண்டு இரு சக்கர வாகனங்களுக்கு மேல் யாரேனும் கூட்டமாக சென்றால் அவர்களிடம் விசாரணை நடத்தி வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என எச்சரிக்கையும் சென்னை காவல் துறையால் விடுக்கப்பட்டது.
அதேபோல, புத்தாண்டு இரவு விதிமீறலில் ஈடுபட்டதாக 932 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதில் 360 வாகனங்கள் மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டியதாகவும், அதிவேகமாக செல்லுதல், ஹெல்மெட் அணியாமல் செல்லுதல் உள்ளிட்ட விதி மீறலில் ஈடுபட்டதாக 572 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
காவல் துறையின் பாதுகாப்பு ஏற்பாடுகளால், சென்னை வளசரவாக்கத்தில் நடந்த விபத்தைத் தவிர, வேறெங்கும் விபத்துகள் ஏற்படாமல் புத்தாண்டு சென்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இதுபோன்ற பாதுகாப்பான புத்தாண்டு கொண்டாடப்பட்டதற்கு பொதுமக்கள் சென்னை காவல் துறை சமூக வலைதளப் பக்கத்தை இணைத்து பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.
பொதுமக்களின் பாராட்டுகளுக்கு பதிலளிக்கும் வகையில் சென்னை காவல் துறை சமூக வலைதளப் பக்கத்தில், மக்களின் ஒத்துழைப்பு இல்லாமல் விபத்து இல்லாத இந்தப் புத்தாண்டை கொண்டாடி இருக்க முடியாது என மக்களுக்கு நன்றி தெரிவித்து பதில் அளித்துள்ளது.
கடந்தாண்டு புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டதாக 269 வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில், மூன்று விபத்துகள் ஏற்பட்டு அதில் ஒருவர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:தொடர் சர்ச்சையில் சிக்கும் TTF வாசன்.! காரின் நம்பர் பிளேட் இல்லாமல் வந்து அபராதம்!