சென்னை:தமிழ்நாடு அரசின் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சராக இருந்து வருபவர், செந்தில் பாலாஜி. இந்த நிலையில், சென்னை டி.ஜி.எஸ் தினகரன் சாலையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான அரசு பங்களா மற்றும் அபிராமபுரம் பிஷப் கார்டன் பகுதியில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் இல்லம், அபிராமபுரத்தில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் உதவியாளர் கோகுல் வீடு, அதேபோல் கரூரில் நான்கு இடங்களிலும் அமலாக்கத் துறை அதிகாரிகள் நேற்று காலை முதல் மத்திய தொழிற்பாதுகாப்பு படை வீரர்கள் பாதுகாப்புடன் அமலாக்கத் துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.
இந்த சோதனையில் சில ஆவணங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் கைப்பற்றியதாகவும், அதனடிப்படையில் சோதனை நடப்பதாகவும் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து தலைமைச் செயலகத்தில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் அறையிலும் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தினர்.
இந்த நிலையில் 18 மணி நேரம் நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனையானது நிறைவு பெற்று, அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறையினர் கைது செய்தனர். அப்போது அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால், உடனடியாக துணை ராணுவப் படையினர் உதவியுடன் அமலாக்கத் துறை அதிகாரிகள் செந்தில் பாலாஜியை ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர்.
இந்த வழக்கை விசாரித்து வரும் அமலாக்கத் துறை விசாரணை அதிகாரி கார்த்திக் தேசாரி உள்பட அனைவரும் ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளனர். இதனால் 50 மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படை வீரர்கள், அதிவிரைவுப் படையினர் 100க்கும் மேற்பட்டோர் காவல் துறையினர் ஓமந்தூரார் மருத்துவமனை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நிலை கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், அவரது இருதய துடிப்பு உடலின் ஆக்சிஜன் சமநிலை கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை தரப்பில் தகவல் அளிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல், 2 முதல் 3 நாட்கள் வரை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சிகிச்சை தேவைப்படுவதாகவும், சீரான இதயத் துடிப்பு இல்லாத நிலையில், தேவைப்பட்டால் ஆஞ்சியோ சிகிச்சை அளிக்க வேண்டி இருக்கும் எனவும் அரசு ஓமந்தூரார் மருத்துவமனை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். இதில் அமைச்சர்கள் உதயநிதி, எம்பி என்.ஆர்.இளங்கோ உள்ளிட்டோர் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் இடம் பெற்றதாக தெரிகிறது. மேலும், அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ள செந்தில் பாலாஜியை இன்று காலை 10 மணியிலிருந்து 11 மணிக்குள் செஷன்ஸ் நீதிமன்றத்தில் அமலாக்கத் துறையினர் ஆஜர்படுத்த இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இதையும் படிங்க:ED Arrest: செந்தில் பாலாஜி கைது - அமைச்சர்கள் கூறியது என்ன?