சென்னை: மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் பிரியா தலைமையில் மே மாதத்துக்கான மாமன்ற கூட்டம் நடைபெற்றது. மாநகராட்சி ஆணையாளராக ராதாகிருஷ்ணன் பதவி ஏற்ற பிறகு நடக்கும் முதல் கூட்டம் இதுவாகும். முதல் மாமன்ற கூட்டத்தில் பங்கேற்ற ஆணையர் ராதாகிருஷ்ணனுக்கு மேயர், துணை மேயர், மாமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். இக்கூட்டத்தில் மொத்தம் 66 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
* அடையார் மண்டலத்தில், வார்டு 173 வது பகுதியில் அடையாறு காந்திநகர் கால்வாய் கரை சாலையில் புதிதாக அமைக்கப்பட உள்ள பூங்காவிற்கு டாக்டர். கலைஞர் மு.கருணாநிதி பூங்கா என்று பெயர் சூட்டுவதற்கு அனுமதி வழங்கப்பட்டது.
* பட்ஜெட்டில் அறிவித்தபடி, சென்னை பள்ளிகளில் உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளி மாணவர்களை நான்கு குழுக்களாக பிரித்து, நான்கு வண்ண டி.சர்ட் கொள்முதல் செய்ய 62,06,647 ரூபாய் ஒதுக்கீடு செய்து அனுமதி அளிக்கப்பட்டது.
* பட்ஜெட்டில் அறிவித்த படி, சென்னை மாநகராட்சி பள்ளிகளில் இசை ஆசிரியர்கள் உள்ள பள்ளிகளுக்கு வயலின், ட்ரம் செட் உள்ளிட்ட 10 இசைக் கருவிகள் வாங்க 4.99 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்ய அனுமதி.
* சென்னை ரிப்பன் மாளிகையில் ஒலிபெருக்கி அமைப்பினை மேம்படுத்தி, புதிய டிஜிட்டல் முறையிலான ஒலிபெருக்கியை அமைக்க டெலிகேட் கலந்தாய்வு மைக்குகள், சேர்மன் மைக்குகள், அதனை சார்ந்த கட்டுப்பாட்டு கருவிகள், மென்பொருள் மற்றும் சர்வர்களை வழங்கி நிறுவி சோதனை செய்தல் மற்றும் இயக்கி வைக்கும் பணிக்காக ரூ.3.43 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு அனுமதி வழங்கப்படுவது என முடிவு செய்யப்பட்டது.
பின்னர் கூட்டத்தில் உரையாற்றிய உறுப்பினர்கள் சிலர், "மயான பூமியில் ஒரு உடலை தகனம் செய்வதற்கு ரூ.10,000 முதல் ரூ.50,000 வரை பணம் கேட்கிறார்கள். உடல் தகனம் செய்வதற்கு பணம் வழங்க வேண்டுமா? மாநகராட்சி பணியாளர்கள் இருக்கிறார்களா? எவ்வளவு நபர்கள் மயான பணியாளர்களாக இருக்கிறார்கள்?" என கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்து பேசிய மேயர் பிரியா, "மாநகராட்சி சார்பில் செயல்படும் மயானத்தை இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம். இது தொடர்பான ஆய்வுக்கூட்டம் சமீபத்தில் நடைபெற்றது. இதில் மயானத்தில் அனைத்து சேவைகளும் இலவசம் என புதிய அறிவிப்பு பலகையை வைக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தியுள்ளோம். இதனை மாமன்ற உறுப்பினர்கள் ஆய்வு செய்ய வேண்டும். மயான பூமியில் பணம் கொடுக்க தேவை இல்லை" என தெரிவித்தார்.
மேலும் சில மாமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி சார்பில் வழங்கப்பட்டுள்ள அலைபேசி எண் கடந்த முறை இருந்த கவுன்சிலரின் பெயரிலே உள்ளது என்றும், பொதுமக்கள் அழைத்தால் true caller-ல் அவர்களின் பெயரை காட்டுவதாகவும் தெரிவித்தனர். இதை உடனடியாக மாற்றவும், வேகமான இணைய வசதியை ஏற்படுத்தித் தர வேண்டும் என்றும் வலியுறுத்தினர். சிறந்த டேட்டா திட்டத்தின் அடிப்படையில், சிம் கார்டு வழங்கப்படும் என மேயர் பிரியா உறுதியளித்தார்.
இதையும் படிங்க: ரூ.6,500 கோடி அளவில் வெளிநாடுகளுக்கு மீன் ஏற்றுமதி: அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பெருமிதம்!