சென்னை:அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழக நிர்வாகத்தை கண்டித்து, அக்கல்லூரியில் பயிலும் நூற்றுக்கும் அதிகமான மாணவிகள் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சென்னை சைதாப்பேட்டையில் இயங்கி வரும் அன்னை தெரேசா மகளிர் பல்கலைக் கழகத்தில் முதுகலை பட்டப்படிப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
எனவே இங்கு, எம்.காம் (M.Com), எம்.பி.ஏ (MBA) உள்ளிட்ட முதுகலை படிப்புகளில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். மேலும் இந்த பல்கலைக்கழகத்தில் 5 ஆண்டு படிக்கும் முதுகலை படிப்பு உள்ளதாக கூறப்படுகிறது. அந்த வகையில் இந்த முதுகலை படிப்பில் சேரும் மாணவிகள், விருப்பப்பட்டால் மூன்று ஆண்டுகள் முடிந்த பின்னர் வெளியே செல்லலாம் எனவும் அந்த மூன்று ஆண்டுக்கான இளங்கலை பட்டப் படிப்பு சான்றிதழ் வழங்கப்படும் எனவும் சொல்லி கல்லூரிகளில் மாணவிகளை சேர்த்ததாக கூறப்படுகிறது.
ஆனால் தற்போது, ஐந்தாண்டுகள் முடித்தால் மட்டுமே முதுகலை பட்டப் படிப்புக்கான சான்று கொடுக்கப்படும் என கல்லூரி நிர்வாகம் கூறுவதாக மாணவிகள் தெரிவித்து உள்ளனர். மேலும் பல்கலைக்கழகத்தில் பயின்று வரும் மாணவிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப பேராசிரியர்கள் இல்லை எனவும், தேர்வு எழுதி மூன்று ஆண்டுகளாகியும், இதுவரை மதிப்பெண் பட்டியல் வழங்கவில்லை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை மாணவிகள் தெரிவித்து உள்ளனர்.