சென்னை: இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நேற்று (ஜன.29) நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று (ஜன.30) காலை 8.30 மணியளவில் தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில், இலங்கை - திரிகோணமலையில் இருந்து கிழக்கு - தென்கிழக்கே சுமார் 670 கிலோ மீட்டர் தொலைவிலும், காரைக்காலில் இருந்து கிழக்கு - தென்கிழக்கே சுமார் 880 கிலோ மீட்டர் தொலைவிலும் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நிலை கொண்டுள்ளது.
இது நாளை (ஜன.31) மாலை வரை மேற்கு - வடமேற்கு திசையிலும், அதன் பிறகு மேற்கு - தென்மேற்கு திசையிலும் நகர்ந்து நாளை மறுநாள் (பிப்.1) காலை இலங்கை கடற்பகுதிகளை கடக்கக் கூடும். இதன் காரணமாக இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளின் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
இதேபோல நாளை தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் போன்ற பகுதிகளின் ஒரு சில இடங்களிலும், உள் தமிழ்நாட்டு மாவட்டங்களின் ஓரிரு இடங்களிலும் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
நாளை மறுநாள் தென் தமிழ்நாட்டின் மாவட்டங்களில் அநேக இடங்களிலும், வடதமிழ்நாட்டு மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளின் ஓரிரு இடங்களிலும் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். முக்கியமாக கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும் கடலூர் போன்ற மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளின் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
தொடர்ந்து வருகிற பிப்ரவரி 2ஆம் தேதி, தென்தமிழ்நாட்டு மாவட்டங்களின் அநேக இடங்களிலும், வடதமிழ்நாட்டு மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளின் ஓரிரு இடங்களிலும் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் பிப்.3ஆம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் போன்ற பகுதிகளின் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.