தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சிங்கார சென்னையின் போக்குவரத்தையே முற்றிலுமாக மாற்றியமைக்கும் மெட்ரோ திட்டம்! - சென்னை மெட்ரோ இரண்டாம் கட்ட பணிகளை தொடங்கி வைத்த அமித் ஷா

தமிழ்நாடு அரசு இரண்டாம்கட்ட மெட்ரோ திட்டத்திற்கான விரிவான திட்ட மதிப்பீடு அறிக்கையை தயார் செய்து மத்திய அரசுக்கு அனுப்பியிருந்தது. மேலும்,செலவுகளைக் குறைக்க ஏதுவாக சுரங்க பாதைகளும், சுரங்கத்தில் அமையவுள்ள மெட்ரோ ரயில் நிலையங்களும் குறைக்கப்பட்டன. இத்திட்டத்திற்கு மத்திய அமைச்சர் அமித் ஷா இன்று அடிக்கல் நாட்டினர்

Chennai Metro second phase
Chennai Metro second phase

By

Published : Nov 21, 2020, 11:22 PM IST

இந்தியாவில் மிகவும் விரிவான பொதுப்போக்குவரத்தை கொண்ட நகரங்களில் ஒன்று சென்னை. இருப்பினும், சென்னையை நோக்கி படையெடுக்கு மக்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரிப்பதால், சென்னையின் முக்கியச் சாலைகள் பெரும்பாலும் நெரிசலாகவே காணப்படுகின்றன.

இந்த நிலையை மாற்றியமைக்க திமுக ஆட்சியில் 2007ஆம் ஆண்டு சென்னையில் மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. மெட்ரோ கட்டுமான பணிகள் அதிக செலவைப் பிடிக்கும் என்பதால் ஜப்பான் நாட்டு வங்கியுடன் ஒப்பந்தம் போடப்பட்டது.

சென்னையில் மெட்ரோ

கட்டுமான பணிகளில் ஏற்பட்ட பல்வேறு தாமதங்களுக்குப் பின்னர், கடைசியில் 2015ஆம் ஆண்டு ஜூன் 29ஆம் தேதி சென்னையில் மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டது. தற்போது சென்னையில் மெட்ரோ சேவை இரண்டு வழித்தடங்களில் இயக்கப்படுகிறது.

வண்ணாரப்பேட்டை முதல் சென்னை விமான நிலையம் வரையும், அதேபோல சென்னை சென்டரல் ரயில் நிலையம் முதல் பரங்கிமலை வரையும் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன.

சென்னை மெட்ரோ 1

இந்தத் வழித்தடங்களில் சைதாப்பேட்டை முதல் வண்ணாரப்பேட்டை வரையிலான வழித்தடம் சாலையின் அடியில் சுரங்க முறையில் அமைந்துள்ளது. மற்ற வழித்தடங்கள் மேம்பால முறையில் அமைந்துள்ளன. முதல்கட்ட மெட்ரோ திட்டத்தின் விரிவாக்கமாக வண்ணாரப்பேட்டை – விம்கோ வரையிலான வழித்தடத்தில் பாதை கட்டுமான பணிகள் சில வாரங்களுக்கு முன் நிறைவடைந்தது. அப்பகுதியில் உள்ள மெட்ரோ ரயில் நிலையங்களின் கட்டுமான பணிகள் தற்போது இறுதிக்கட்டத்தில் மும்முரமாக நடைபெற்றுவருகின்றன.

2ஆம் கட்ட பணிகள்: அமித் ஷா தொடங்கிவைப்பு

இந்நிலையில், இரண்டு நாள் பயணமாக சென்னை வந்துள்ள உள் துறை அமைச்சர் அமித் ஷா, இன்று சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற தமிழ்நாடு அரசின் விழாவில் கலந்துகொண்டு, கோவை உயர்மட்டச் சாலைத் திட்டம், அமுல்லைவாயல் லூப் பிளான்ட் (Lube Plant) மற்றும் காமராஜர் துறைமுகத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

அமித் ஷா

மேலும், இன்று அவர் ரூ.61,843 கோடி மதிப்பீட்டிலான இரண்டாம் கட்ட சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கும் அடிக்கல் நாட்டினார்.

சென்னை மெட்ரோ - 2ஆம் கட்ட வழித்தடங்கள்:

இன்று அமித் ஷா அடிக்கல் நாட்டியுள்ள இத்திட்டம், மாதவரம் - சிறுசேரி சிப்காட் (45.8 கி.மீ.), மாதவரம் - சோழிங்கநல்லூர் (47 கி.மீ.), பூந்தமல்லி – கலங்கரை விளக்கம் (26.1 கி.மீ.) என்று மூன்று வழித்தடங்களில் 119 கி.மீ. தூரத்தில் அமையவுள்ளது.

தமிழ்நாடு அரசு முதலில் இதற்கான விரிவான திட்ட மதிப்பீடு அறிக்கையைத் தயார்செய்து மத்திய அரசிற்கு அனுப்பியிருந்தது. அத்திட்டத்தில் மத்திய அரசு பரிந்துரைக்கு ஏற்ப சில மாற்றங்கள் செய்யப்பட்டன. மேலும்,செலவுகளைக் குறைக்க ஏதுவாகச் சுரங்கப் பாதைகளும், சுரங்கத்தில் அமையவுள்ள மெட்ரோ ரயில் நிலையங்களும் குறைக்கப்பட்டன.

இரண்டாம்கட்ட மெட்ரோ திட்டத்திற்கு அடிக்கல் நாட்டிய அமித் ஷா

சுமார் 60 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் உருவாகும் இத்திட்டத்தின் செலவில் 60 விழுக்காடு நிதியை கடனாக ஜப்பான் பன்னாட்டு நிறுவனம் வழங்கும். மீத தொகையில் மத்திய அரசு 20 விழுக்காடும் மாநில அரசு 20 விழுக்காடும் வழங்கும்.

புதிய மெட்ரோ பணிமனைகளும் மெட்ரோ ஸ்டேஷன்களும்

சென்னையில் தற்போது கோயம்பேடு அருகே மெட்ரோ ரயில் பணிமனை உள்ளது. இதேபோல இரண்டாம்கட்ட மெட்ரோ திட்டத்திற்காக மாதவரம், பூந்தமல்லி, சிறுசேரி ஆகிய இடங்களிலும் புதிய பணிமனைகள் அமையவுள்ளன.

தற்போதுள்ள 34 மெட்ரோ நிலையங்கள் 220 மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளன. இருப்பினும், இரண்டாம்கட்ட மெட்ரோவில் அமையவுள்ள நிலையங்கள் அளவில் சிறியதாக 150 மீட்டர் பரப்பளவில் அமையவுள்ளது. இத்திட்டத்திற்கு முடிந்தவரை அரசு நிலங்களையே பயன்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னை மெட்ரோ 2

மேலும், முதல்கட்ட ரயில் நிலையங்களில் உள்ளது போல, ஷேர் ஆட்டோ சேவையும் இந்த ரயில் நிலையங்களைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முதல்கட்ட மெட்ரோவின் கட்டுமானத்தில், மேம்பாலம்-சுரங்கம், ரயில் நிலையம் என அனைத்து கட்டுமானத்திற்கும் ஒரே டெண்டர் விடப்பட்டது. இதனால் மேம்பாலம் அல்லது சுரங்கத்தின் கட்டுமானம் தாமதமாகும்போது, ரயில்நிலையங்களின் கட்டுமானங்களும் தாமதமாகின.

இந்த காலதாமதத்தை தவிர்க்கும்வகையில், இந்த முறை மேம்பாலம்-சுரங்கம் பாதை கட்டுமானத்தின் டெண்டர் தனியாகவும் ரயில் நிலையங்களின் கட்டுமானத்தின் டெண்டர் தனியாகவும் கோரப்பட்டுள்ளது.

சென்னை மெட்ரோ சுரங்கம்

இரண்டாம் கட்ட மெட்ரோ வழித்தட விவரங்கள்

முதல் வழித்தடம்:

மாதவரம் முதல் சிறுசேரி சிப்காட் வரையில் 48 கி.மீ. நீளத்தில் அமையவுள்ளது. இதில் மூலக்கடை, கே.எம்.சி., அடையாறு, திருவான்மியூர், சத்தியபாமா பல்கலைக்கழகம் என மொத்தம் 50 மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைகின்றன.

இரண்டாம் வழித்தடம்:

26.1 கி.மீ. தூரத்தில் கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி வரையிலான இரண்டாம் கட்ட வழித்தடத்தில் நந்தனம், கோடம்பாக்கம், சாலிகிராமம் உள்ளிட்ட 30 மெட்ரோ ரயில் நிலையங்கள் அமையவுள்ளன.

மூன்றாம் வழித்தடம்:

மாதவரம் – சோழிங்கநல்லூர் வரையில் அமைய உள்ள 47 கி.மீ. நீள வழித்தடத்தில் நெற்குன்றம், வளசரவாக்கம், ஸ்டெர்லிங் ரோடு உள்ளிட்ட 46 நிலையங்கள் வர உள்ளன.

சென்னை மெட்ரோ வழித்தடங்கள்

இந்த இரண்டாம்கட்ட வழித்தடத்தில், மாதவரம் – கோயம்பேடு, மாதவரம் – சோழிங்கநல்லூர் வழித்தடங்களுக்கு முக்கியத்துவம் அளித்து, அவற்றை முதலில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

எவ்வித தாமதமும் இன்றி கட்டுமான பணிகள் நடைபெறும்பட்சத்தில் முழுத் திட்டமும் 2026ஆம் ஆண்டின் பிற்பகுதியில் முடியும். ஒட்டுமொத்தமாக சென்னை மெட்ரோ நகரின் போக்குவரத்தையே முற்றிலுமாக மாற்றியமைக்கும்.

ABOUT THE AUTHOR

...view details