சென்னை: தமிழகத்தில் இன்றும், நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், "தென் இந்திய பகுதிகளில் மேல் நிலவும் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது.
இதன் காரணமாக, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்றும்(மார்ச்31), நாளயும்(ஏப்ரல் 1) ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இதைத் தொடர்ந்து தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஏப்ரல் 2 முதல் 4 வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்த வரையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலையாக 34-35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலையாக 26 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த 48 மணி நேரத்திற்கான அறிக்கையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலையாக 34-35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலையாக 26 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.
கடந்த 24 மணி நேரக்கணக்கின் படி, திற்பரப்பில் (கன்னியாகுமரி) 5செ.மீ-ம், சின்கோனா (கோயம்புத்தூர்), பார்வூட் (நீலகிரி), பாலக்கோடு (தருமபுரி), பொள்ளாச்சி (கோயம்புத்தூர்), வால்பாறை PTO (கோயம்புத்தூர்) ஆகிய இடங்களில் தலா 4செ.மீ மழையும் சூளகிரி (கிருஷ்ணகிரி), சின்னார் அணை (கிருஷ்ணகிரி), வரட்டுப்பள்ளம் (ஈரோடு), பேச்சிப்பாறை (கன்னியாகுமரி), சிவலோகம் (கன்னியாகுமரி), ஏற்காடு (சேலம்) ஆகிய இடங்களில் தலா 3 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது. மேலும் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை என ஏதுமில்லை" என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:தமிழ்நாட்டில் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு