சென்னை:தென்தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, அக்டோபர் 23-ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இன்றைய மழை வாய்ப்பு: நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளைய நிலவரம்: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரையில், வானிலை முன்னறிவிப்பாக அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மழைப்பதிவு: தமிழகத்தில் அதிகபட்சமாக, உப்பாறு அணை (திருப்பூர்), திற்பரப்பு (கன்னியாகுமரி), தம்மம்பட்டி (சேலம்), திருவாடானை (ராமநாதபுரம்), களியல் (கன்னியாகுமரி), தீர்த்தாண்டதானம் (ராமநாதபுரம்) பகுதிகளில் தலா 8 செ.மீ. மழைப்பதிவாகி உள்ளது. தேவகோட்டை (சிவகங்கை), சூலூர் (கோயம்புத்தூர்), கோயம்புத்தூர் விமான நிலையம், கிளானிலை (புதுக்கோட்டை), தென்பரநாடு (திருச்சிராப்பள்ளி) பகுதிகளில் தலா ௭ செ.மீ. மழைப்பதிவாகி உள்ளது.
வட்டானம் (ராமநாதபுரம்), திண்டிவனம் (விழுப்புரம்), தலைஞாயிறு (நாகப்பட்டினம்), மேட்டூர் (சேலம்), சிவலோகம்(சிற்றாறு-II) (கன்னியாகுமரி), குண்டேரிப்பள்ளம் (ஈரோடு) பகுதிகளில் தலா ௬ செ.மீ. மழைப்பதிவாகி உள்ளது. வால்பாறை PAP (கோயம்புத்தூர்), வால்பாறை தாலுகா அலுவலகம் (கோயம்புத்தூர்), சேலம், பல்லடம் (திருப்பூர்), திருப்பூண்டி (நாகப்பட்டினம்), ஆத்தூர் (சேலம்), ராசிபுரம் (நாமக்கல்), BASL மணம்பூண்டி (விழுப்புரம்), தஞ்சாவூர், மங்களபுரம் (நாமக்கல்), பொன்னையார் அணை (திருச்சிராப்பள்ளி) பகுதிகளில் தலா ௫ செ.மீ. மழைப்பதிவாகி உள்ளது.
TNAU CRI ஏத்தாப்பூர் (சேலம்), வேளாங்கண்ணி (நாகப்பட்டினம்), ஒட்டன்சத்திரம் (தர்மபுரி), கொடுமுடி (ஈரோடு), பாடலூர் (பெரம்பலூர்), மருங்காபுரி (திருச்சிராப்பள்ளி), காரைக்குடி (சிவகங்கை), ஓமலூர் (சேலம்), சோழவந்தான் (மதுரை), அவினாசி (திருப்பூர்), திருக்கோயிலூர் (கள்ளக்குறிச்சி), திருப்பூர் PWD, தேக்கடி (தேனி), கிளன்மார்கன் (நீலகிரி), திருமூர்த்தி அணை (திருப்பூர்), கூடலூர் பஜார் (நீலகிரி), விண்ட் வொர்த் எஸ்டேட் (நீலகிரி), புதுச்சத்திரம் (நாமக்கல்), திருமூர்த்தி IB (திருப்பூர்), ஆனைப்பாளையம் (கன்னியாகுமரி), வூட் பிரையர் எஸ்டேட் (நீலகிரி), எழுமலை (மதுரை), நாகுடி (புதுக்கோட்டை), புள்ளம்பாடி (திருச்சிராப்பள்ளி), மதுரை விமானநிலையம் பகுதிகளில் தலா ௪ செ.மீ. மழைப்பதிவாகி உள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை: நாளை தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகள் மற்றும் லட்ச தீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:அரியலூர் நாட்டு பட்டாசு ஆலை வெடி விபத்தில் 9 பேர் பலி: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!