சென்னை:வங்கக்கடலில் நிலவிய அதி தீவிர புயல் குறித்தும், தமிழகத்தின் வானிலை நிலவரம் குறித்தும், சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “நேற்று (மே14) வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய அதி தீவிர “மோக்கா” புயல் நேற்று மதியம் தென்கிழக்கு வங்கதேசம் மற்றும் வடக்கு மியான்மர் கரையை கடந்தது. மேற்கு திசை காற்று மற்றும் வெப்ப சலனம் காரணமாக மிதமான மழை பெய்யக்கூடும்.
தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று (மே15) முதல் மே17 வரை ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் மே.18, 19ஆகிய தேதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அதிகபட்ச வெப்பநிலை: இன்றும், நாளையும் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பிலிருந்து 2 - 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது வெப்ப அழுத்தம் (Heat Stress) காரணமாக அசௌகரியம் ஏற்படலாம்.