தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அதி தீவிரப் புயலாக கடக்கிறது மோக்கா புயல்; அடுத்த 4 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு! - மியான்மர்

வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய மோக்கா புயல் அதி தீவிர புயலாக, மியான்மர் கடற்கரையை கடக்கிறது எனவும், தமிழகத்தில் அடுத்த நான்கு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Chennai Meteorological Department announced Mocha Cyclone is making landfall as a severe storm and there is a possibility of moderate rain in Tamil Nadu for the next 4 days
வானிலை அறிக்கை

By

Published : May 14, 2023, 4:22 PM IST

சென்னை: மோக்கா புயல் குறித்தும் தமிழ்நாட்டில் மழை வாய்ப்பு குறித்தும் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ''நேற்று (மே13) மத்தியகிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய அதி தீவிர “மோக்கா” புயலானது, வடக்கு - வடகிழக்குத் திசையில் நகர்ந்து இன்று (மே 14) காலை 08:30 மணி அளவில், வடகிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியகிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் போர்ட் பிளேயரில் இருந்து சுமார் 850 கிலோ மீட்டர் வடக்கு – வடமேற்கே நிலைகொண்டுள்ளது.

இது வடக்கு - வடகிழக்குத் திசையில் நகர்ந்து இன்று நண்பகல் தென்கிழக்கு வங்கதேசம் மற்றும் வடக்கு மியான்மர் கடற்கரையில் அதி தீவிர புயலாக கடக்கக்கூடும். அந்த சமயத்தில் காற்றின் வேகம் மணிக்கு 180 முதல் 190 கிலோ மீட்டர் வேகத்திலும்; இடையிடையே 210 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று (மே 14) முதல் மே16ஆம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் மே 17, 18 ஆகிய தேதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

அதிகபட்ச வெப்பநிலை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் மே14ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக 2 - 3 டிகிரி செல்சியஸ் உயரக்கூடும். தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் மே 14, 15, 16ஆகிய தேதிகளில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பிலிருந்து 2 - 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது வெப்ப அழுத்தம் (Heat Stress) காரணமாக அசௌகரியம் ஏற்படலாம்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு: அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 39 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கும். அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 39 - 40 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 29 - 30 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை: தென்மேற்கு வங்கக்கடல் & இலங்கை கடலோரப் பகுதிகள்; இன்றும், நாளையும் இலங்கை கடற்கரையை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். இந்த நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள். ஆழ் கடலிலுள்ள மீனவர்கள் உடனடியாக கரைக்குத் திரும்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: "செவிலியர்கள் பணி விவகாரத்தில் 'விரக்தியை நோக்கி' செல்கிறது திமுக" - ஓபிஎஸ் விளாசல்!

ABOUT THE AUTHOR

...view details