சென்னை: வங்கக் கடலில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி, டிசம்பர் 4 ஆம் தேதி புயலாக மாறி, தெற்கு ஆந்திரா மற்றும் வட தமிழகம் இடையே கரையை கடக்க கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில், “தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து, நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவி வந்தது. இந்த நிலையில், இன்று (டிச.1) காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது.
மேலும் இது புயலாக வலுப்பெற்று தெற்கு ஆந்திரா மற்றும் வட தமிழகம் இடையே கரையை கடக்கும். வங்க கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று உள்ள நிலையில், இன்று காலை 5 மணி அளவில் சென்னைக்கு தென்கிழக்கில் சுமார் 800 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது. இது தொடர்ந்து மேற்கு மற்றும் வட மேற்கு திசையில் நகர்ந்து, நாளை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும்.
பின்னர் டிசம்பர் 3 ஆம் தேதி வாக்கில் புயலாக வலுப்பெறக்கூடும். அதன் பின்னர் வடமேற்கு திசையில் நகர்ந்து தெற்கு ஆந்திரா மற்றும் அதனை ஒட்டி உள்ள வட தமிழக கடலோர பகுதிகள் சென்னைக்கும் மசூலிபட்டினத்திற்கும் இடையே 4 தேதி மாலை புயலாக கரையை கடக்க கூடும்” என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
மழைக்கு வாய்ப்பு:“தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய இலங்கை பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, நாளை (டிச.2) இராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளின் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
இதைத் தொடர்ந்து நாளை மறுதினம் (டிச.3) வட தமிழக மாவட்டங்களான, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், இராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் ஒரு சில இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளதாக”
சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.